டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சூப்பர் 8 சுற்றில் விளையாட இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா இதுவரை இந்த தொடரில் ஒரு ரன் கூட எடுக்காமல் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் அபிஷேக் ஷர்மா குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “அபிஷேக் ஷர்மா பேட்டிங் குறித்து கவலைப்படுபவர்கள் மீதுதான் நான் கவலைப்படுகிறேன். அவரை எதிர்கொள்ள போகும் அணிகள் குறித்து நான் நினைக்கிறேன். அவர் திரும்பவும் வந்து விட்டால் என்ன செய்வார் என்று உங்கள் அனைவருக்குமே தெரியும். இது ஒரு அணி விளையாட்டு. தனிப்பட்ட வீரர்களுக்கு இதுபோன்ற சூழ்நிலைகள் வரும். அவர் தன்னுடைய இயல்பான முறையில் விளையாட வேண்டும் என்பதை எங்களுடைய விருப்பம்.
அது வேலை செய்யவில்லை என்றால் பிரச்சனை இல்லை, அதை செய்ய நாங்கள் இருக்கிறோம். அவர் கடந்த ஒரு வருடமாக எங்களை காப்பாற்றி வந்தார். இப்போது எங்களுடைய முறை. தற்போது பவர் பிளேவில் 40 முதல் 50 ரன்கள் எடுப்பது என்பது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. நாங்கள் ஏற்கனவே மோதிய இரண்டு பெரிய தொடர்களில் பெரிய ரன்கள் எடுக்கப்பட்டிருக்கிறது” என்று பேசி இருக்கிறார்.

