ஆசியக் கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐக்கிய அரபு அமீரக அணி 13.1 ஓவர்களில் 57 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பவுலிங் அசத்திய ஆல்ரவுண்டர்
அதேபோல் ஆல்ரவுண்டர் சிவம் துபே 2 ஓவர்களில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சிவம் துபேவின் பவுலிங் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. அதிலும் சிவம் துபே மணிக்கு 130 கிமீக்கும் வேகமாக பவுலிங் செய்தது பாராட்டுக்களை பெற்று வருகிறது. சிஎஸ்கே அணிக்காக சிவம் துபே ஆடுகையில், பெரியளவில் பவுலிங் செய்ததே இல்லை.
இதுகுறித்து சிவம் துபே பேசுகையில், எங்களின் பவுலிங் பயிற்சியாளர் மோர்க்கல் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனுக்கு வெளியில் பவுலிங் செய்ய அறிவுறுத்தினார். அதேபோல் என்னுடைய பவுலிங்கில் புதிதாக ஸ்லோயர் பந்துகளை தயார் செய்துள்ளேன். இதற்காக நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றினோம். என்னுடைய ரன் அப்பையும் மாற்றி இருக்கிறார்.
சிவம் துபே பேட்டி
இதனால் கூடுதல் வேகத்தில் பவுலிங் செய்ய முடிகிறது. பயிற்சி தொடங்கிய போதே கம்பீர் மற்றும் மோர்க்கல் இருவரும் என்னுடைய பவுலிங்கின் தேவை குறித்தும், என்னுடைய ரோல் குறித்து பேசினார்கள். அதனால் பவுலிங் செய்வதற்கு தயாராகவே இருந்தேன். ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின் கடந்த 2 மாதங்களாக என்னுடைய ஃபிட்னஸில் தீவிரமாக பணியாற்றி வந்தேன்.
என்னுடைய பேட்டிங் குறித்த புரிதல் இருக்கிறது. மிடில் ஆர்டரில் களமிறங்குவதால், பவர் ஹிட்டிங்கில் ஈடுபட வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக பல பவுலர்கள் ஷார்ட் பால்கள் மூலமாக என்னை கட்டுப்படுத்தலாம் என்று கருதுகிறார்கள். ஆனால் என்னுடைய ஷாட் ரேஞ்சை உயர்த்தி இருக்கிறேன். அதனை வரும் நாட்களில் பார்ப்பீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

