ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி முன்னெறி இருக்கிறது. வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளை எளிதாக வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, அடுத்ததாக மார்ச் 2ம் தேதி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. இதனால் கடந்த முறை போல் அல்லாமல் இம்முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் மார்ச் 9ம் தேதி முடிவடைய உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. மார்ச் 22ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், முதல் ஆட்டத்தில் கொல்கத்தா – ஆர்சிபி அணிகள் விளையாடுகின்றன. இதன்பின் 2வது நாளில் நடக்கும் 2வது ஆட்டத்தில் சிஎஸ்கே – மும்பை அணிகள் மோதுகின்றன.
இங்கிலாந்து சுற்றுப்பயணம்
பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்கு பின் இந்திய அணி ஒயிட் பால் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் ஐபிஎல் தொடருக்கு பின் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. மே 25ஆம் தேதியுடன் ஐபிஎல் தொடர் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு பின் இந்திய அணி இங்கிலாந்து புறப்படுகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் 4வது சீசனுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் பயணமும் தொடங்குகிறது. இதனால் இந்திய அணி வீரர்கள் கடைசி நேரத்தில் பயிற்சியை தொடங்காமல் இருக்க, பிசிசிஐ புதிய ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
ஐபிஎல் தொடரின்போதே பயிற்சி
கடந்த முறை இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை சமன் செய்தது. இம்முறை டெஸ்ட் தொடரை இங்கிலாந்து மண்ணில் கைப்பற்ற வேண்டும் என்பதில் பிசிசிஐ மும்முரமாக உள்ளது. இதற்காக ரெட் பால் கிரிக்கெட் தொடர்பான பயிற்சியில் ஐபிஎல் தொடரின் போதே ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல், ரிஷப் பண்ட் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் மற்றும் முகமது ஷமி, பும்ரா, வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி உள்ளிட பவுலர்கள் மற்றும் பவுலர்களும் ஐபிஎல் தொடரின் போது பயிற்சி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி இம்முறை இங்கிலாந்து மண்ணில் வரலாறு படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

