சில வாரங்களுக்கு முன்பாக இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனால் டிரீம் லெவன், மை லெவன் சர்க்கிள் உள்ளிட்ட ஏராளமான பணம் வைத்து விளையாடும் சூதாட்ட செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்திய அணியின் ஸ்பான்சராக இருந்து வந்த டிரீம் லெவன் அணி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பிசிசிஐ ஸ்பான்சர்
இதன் காரணமாக ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஸ்பான்சராக புதிய நிறுவனத்தை ஒப்பந்தம் செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு முன்னதாக டிரீம் லெவன் நிறுவனம் தரப்பில் இந்திய அணியின் ஸ்பான்சராக செயல்பட ஆண்டுக்கு ரூ.358 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டது. 2023 ஜூலை முதல் டிரீம் லெவன் நிறுவனம் பிசிசிஐ உடன் ஒப்பந்தம் செய்தது.
இந்த நிலையில் டிரீம் லெவனுக்கு தடை விதிக்கப்பட்டால், பிசிசிஐ தரப்பில் புதிய ஸ்பான்சர்களுக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் முதல் செய்யப்படும் இந்த ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு போடப்படும். இந்த ஸ்பான்சர்ஷிப்பின் அடிப்படை தொகையாக ரூ.450 கோடி நிர்ணயிக்கப்பட்டது.
ஒரு போட்டிக்கு ரூ.3.5 கோடி
2025 செப்டம்பர் முதல் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்படும் போது இந்திய அணி மொத்தமாக 2028 வரை 140 போட்டிகளில் விளையாடும். இது வெறும் உள்நாடு, வெளிநாட்டு தொடர்களில் மட்டுமல்லாமல் ஐசிசி தொடரிலும் ஸ்பான்சராக செயல்படும். இதன் மூலமாக ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.3.5 கோடி செலவு செய்ய வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.
அதேபோல் ஐசிசி மற்றும் ஆசியக் கோப்பை போட்டிகளுக்கு ரூ.1.5 கோடி செலவு செய்ய வேண்டும். தற்போது வரை பிசிசிஐ ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்ய டொயோட்டா நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. அதேபோல் ஜியோ, டாட்டா உள்ளிட்ட நிறுவனங்களும் போட்டியில் உள்ளன. இதனால் பிசிசிஐ வருமானம் நடப்பாண்டிலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

