தற்போது 2023-25 சீசனுக்கான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டி 2025 ஆம் வருடம் ஜூன் மாதம் 11-15 தேதிகளில் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இந்த சுழலுக்கான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தற்போது இந்திய அணி முதல் இடத்தில் இருக்கிறது. இறுதியாக இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
தற்போது இந்தியா வர இருக்கின்ற 4 மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்திய அணியின் 2024/25 ஹோம் சீசன் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் பங்களாதேஷ் அணியுடனான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருடன் ஆரம்பமாகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் பங்களாதேஷ் அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தப் போட்டிகளுக்குப் பிறகு இந்தியா, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்திய அணி 6 மாதங்களுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் விளையாட இருப்பதால் அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் பொருட்டு சீனியர் வீரர்களும் துலீப் டிராபியில் விளையாட பிசிசிஐ அறிவுரை வழங்கியது.
இதனைத் தொடர்ந்து கில், ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், சர்பராஸ் கான், இஷான் கிஷான், அக்சர் பட்டேல் உள்ளிட்ட முக்கிய வீரர்களும் இதில் கலந்துகொண்டு விளையாடினர். இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் 16 வீரர்களை கொண்ட இந்திய அணியை பிசிசிஐ தேர்வு குழு இன்று அறிவித்துள்ளது.
இந்த அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டு இருக்கிறார். மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம்பெறாத இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். இந்திய அணியில் கே.எல் ராகுல் மீண்டும் இடம் பிடித்துள்ளார். சமீப காலமாக ஓய்வு வழங்கப்பட்டு வந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பியிருக்கிறார்.
இவர்களைத் தவிர சமீப காலமாக உள்நாட்டுப் போட்டி தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வந்த வேகப்பந்துவீச்சாளர் யாஸ் தயால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இவர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீப காலமாக அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வரும் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருத்ராஜ் கெயிக்வாட் இந்திய அணியில் இடம்பெறவில்லை. மீண்டும் ஒருமுறை அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.
பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடும் டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்களின் பட்டியல்:
ரோஹித் சர்மா(கேப்டன்)
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
சுப்மன் கில்
விராட் கோலி
சர்ப்ராஸ் கான்
கேஎல் ராகுல்
ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்)
துருவ் ஜுரல் (விக்கெட் கீப்பர்)
அக்சர் பட்டேல்
ரவீந்திர ஜடேஜா
குல்தீப் யாதவ்
ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகாஷ் தீப்
யாஸ் தயாள்
முகமது சிராஜ்
ஜஸ்ப்ரீத் பும்ரா

