2025-27ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இன்று தொடங்கி இருக்கிறது. இலங்கை – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் தொடங்கி இருக்கிறது. இலங்கை கிரிக்கெட் அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ்-ன் கடைசி டெஸ்ட் போட்டி என்பதால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கதேசம் – இலங்கை
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணியின் கேப்டன் ஷான்டோ பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் வங்கதேசம் அணி தரப்பில் ஷத்மன் இஸ்லாம் – அனமுல் ஹக் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் அனமுல் ஹக் டக் அவுட்டாகி வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் ஷத்மன் இஸ்லாம் 14 ரன்களிலும், பின்னர் வந்த மோமினுல் ஹக் 29 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் வங்கதேச அணி 45 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் கேப்டன் ஷான்டோ -முஷ்ஃபிகுர் ரஹிம் கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக ஷான்டோ ரன்களை மிகவும் நிதானமாக எடுக்க, வேகப்பந்துவீச்சாளர்களை அட்டாக்கில் இருந்து வெளியேற்றினார்.
சதம் விளாசிய கேப்டன்
இதன்பின் காலே மைதானத்தில் அச்சுற்றுத்தலான ரத்னநாயகே – பிரபத் ஜெயசூர்யா இணை அட்டாக்கில் வந்தது. இவர்களையும் எளிதாக சமாளித்து ஆடிய ஷான்டோ – ரஹிம் இணை வங்கதேச அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இருவருமே அரைசதம் கடட்ந்ஹ நிலையில், ஷான்டோ கொஞ்சம் ரன் குவிப்பை தீவிரப்படுத்தினார்.
சிறப்பாக ஆடிய அவர், சதத்தை விளாசி, அசத்த ஆட்டத்தின் கடைசி நேரத்தில் முஷ்ஃபிகுர் ரஹிமும் சதத்தை எட்டினார். இதன் மூலமாக இரு வீரர்களும் சதத்துடன் முதல் நாள் ஆட்டத்தை நிறைவு செய்தனர். சிறப்பாக ஆடிய ஷான்டோ 260 பந்துகளில் 136 ரன்களும், முஷ்ஃபிகுர் ரஹிம் 186 பந்துகளில் 105 ரன்களையும் விளாசி களத்தில் உள்ளனர். இதனால் இலங்கை அணி ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.