சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் நாதன் லயன் நெருங்குகிறார். அவர் இன்னும் நான்கு விக்கெட்டுகளை எடுத்தால் இந்த மைல்கல்லை தொட்டுவிடுவார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை அவர் நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் போட்டிக்கு முன்பு செய்தியாளருடன் பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் நாதன் லயன், தம் சுழற்பந்து வீச்சில் சிறந்து விளங்குவதற்கு தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினும் ஒரு காரணம் என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விட்டார்.
இது குறித்து பேசிய அவர் தமக்கு தெரியாமலேயே அஸ்வின் என்னுடைய மிகப்பெரிய பயிற்சியாளராக திகழ்ந்திருக்கிறார். அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். ஆரம்ப காலத்திலிருந்து அஸ்வினை நான் பார்த்து வருகிறேன். அஸ்வின் எவ்வாறு பந்து வீசுகிறார் என்பதை உன்னிப்பாக கவனித்து வந்திருக்கிறேன்.
அதிலிருந்து நான் நிறைய பாடம் கற்றுக் கொண்டிருக்கின்றேன். நானும் அஸ்வினும் 500 விக்கெட்டுகளை நெருங்கி இருக்கிறோம். அதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் இருவரும் எதிரெதிர் அணிக்கு ஒன்றாக நிறைய போட்டிகளில் நிறைய மைதான சூழல்களில் விளையாடி இருக்கிறோம்.
நாங்கள் இன்னும் எத்தனை விக்கெட்டுகள் எடுக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. எனக்கு இருப்பது ஒரு ஆசைதான் நாங்கள் இருவரும் ஓய்வு பெற்ற பிறகு ஒன்றாக அமர்ந்து பல விஷயங்கள் குறித்து பேசி கலந்துரையாட வேண்டும். பீர் அடித்துக் கொண்டு இருவரும் பேச வேண்டும். அஸ்வினை நாங்கள் பாராட்டி கொண்டாடுகிறோம்.
ஆனால் அந்த அளவுக்கு இந்தியர்கள் அஸ்வினை கொண்டாடுவதில்லை என்பது எனக்கு உள்ள ஒரு வருத்தம் தான் என்று நாதன் லயன் கூறியிருக்கிறார். நாதன் லயன் இந்த பேச்சு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆசிரியத்தையும் நிகழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஒருவர் தாம் அஸ்வினை பார்த்து தான் கற்றுக் கொண்டேன் என்று கூறுவது தமிழர்களாகிய நமக்கு பெருமையான விஷயமாக பார்க்கப்படுகிறது.

