இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடக்கவுள்ள 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. வழக்கமாக இரு பெரிய அணிகள் மோதிக் கொண்டாலே அதில் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது. இம்முறை நடக்கவுள்ள டெஸ்ட் தொடரின் வெற்றியாளருக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதிச் சீட்டு கிடைப்பதால் இன்னும் அமர்க்களமாக இருக்கப் போகிறது.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. ஆஸ்திரேலியா மண்ணில் நடக்கும் இந்தத் தொடரில் இந்தியாவை சந்திப்பது குறித்தும், தொடரை எப்படி வெல்வது பற்றியும் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியுள்ளார். இந்த மிகுந்த சவாலான டெஸ்ட் தொடரை நிச்சயம் ஆஸ்திரேலியா தான் வெல்லும் என உறுதியும் கொடுத்துள்ளார்.
கேப்டன் கம்மின்ஸ் கூறியதாவது, ” நான் சாதிக்க காத்திருக்கும் பெரிய விஷயங்களில் ஒன்று தான் பார்டர் கவாஸ்கர் டிராபியில் வெல்வது, குறிப்பாக சொந்த மண்ணில் ஜெயிப்பது. நாங்கள் எப்போதெல்லாம் சொந்த மண்ணில் விளையாடுகிறோமோ அதில் அனைத்துப் போட்டிகளும் தரமான ஆட்டத்தை வெளிக்காட்ட வேண்டுமென எங்கள் நாட்டு வீரர்கள் உட்பட அனைவரும் விரும்புவர். “
” ஆனால் நாங்கள் ஆஸ்திரேலியாவில் நடந்த கடைசி 2 டெஸ்ட் தொடர்களிலும் தோல்வியைக் கண்டுள்ளோம். மொத்தமாக பார்டர் கவாஸ்கர் டிராபி வென்று 10 வருடங்கள் மேல் ஆகி விட்டது. இம்முறை நடக்கும் டெஸ்ட் தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. எங்கள் அணி தற்போது நல்ல ஃபார்மில் உள்ளது. அனைவரும் அவர்களது சிறப்பான வெளிப்படுத்தி தொடரை வெல்லும் நோக்கில் உள்ளோம். ” என்றார்.
மேலும், ” தற்போது இந்திய அணி அவர்களது சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்து மிகுந்த அழுத்தத்தில் உள்ளது. இந்த சமயத்தில் அவர்களை எதிர்ப்பது சற்று சுலபம். இந்திய எங்கள் நாட்டுக்கு வரும் போதெல்லாம் நன்றாகவே விளையாடி உள்ளார்கள் தான் ஆனால் இந்த முறை நிச்சயம் அவர்களை அமைதியாக்குவோம். ” என நம்பிக்கையுடன் சவால் விட்டுள்ளார் பேட் கம்மின்ஸ்.

