வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. பார்படாஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி டிராவிஸ் ஹெட்டின் அரைசதம் காரணமாக 180 ரன்களை சேர்த்தது.
ஆஸ்திரேலிய கம்பேக்
சிறப்பாக பவுலிங் செய்த ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 190 ரன்களை எடுத்து ஆல் அவுட்டாகியது. தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி, 310 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட் 61 ரன்களையும், வெப்ஸ்டர் 63 ரன்களையும், அலெக்ஸ் கேரி 65 ரன்களையும் குவித்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஷமார் ஜோசப் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 301 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது. முதல் ஓவரிலேயே பிராத்வெய்ட் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஹேசல்வுட் அதிரடி
பின்னர் ஹேசல்வுட் அட்டாக்கில் கொண்டு வரப்பட வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அதில் மிடில் ஆர்டரில் வந்த கிங் டக் அவுட்டாகியும், ராஸ்டன் சேஸ் 2 ரன்களிலும், ஷாய் ஹோப் 2 ரன்களிலும், அல்ஜாரி ஜோசப் டக் அவுட்டாகியும் வெளியேறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 86 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.
கடைசி நேரத்தில் ஜஸ்டின் க்ரீவ்ஸ் – ஷமார் ஜோசப் கூட்டணி அதிரடியாக ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ஷமார் ஜோசப் 22 பந்துகளில் 44 ரன்களில் ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 141 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக ஆஸ்திரேலியா அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. ஹேசல்வுட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.