பார்டர் கவாஸ்கர் தொடரில் மெல்போர்னில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மிகுந்த பரபர்ப்புகளை கொண்டது. சுவாரசியமான இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றிப் பெற்று 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது.
போட்டியின் முக்கிய தருணத்தில் ரிஷப் பண்ட் விக்கெட்டை டிராவிஸ் ஹெட் எடுத்துவிட்டு விசித்திரமான செய்கையை காட்டி விக்கெட்டை கொண்டாடினார். அவரின் அந்த செய்கை இந்திய ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை உண்டாகியது. அது குறித்து உண்மையான காரணமென பேட் கம்மின்ஸ் விளக்கம் கொடுத்துள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்களும் தொடர்ந்து ஆடிய இந்தியா 369 ரன்களும் அடித்தது. இரண்டாவது இன்னிங்சில் தடுமாற்றத்துடன் காணப்பட்ட ஆஸ்திரேலியா லபுஷேன், பேட் கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோர் உதவியில் 340 ரன்களை இந்தியாவுக்கு இலக்காக நிர்ணயித்தது. கடைசி நாள் ஆட்டம், பிட்ச் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்திய அணி வெற்றிக்குச் செல்லாமல் போட்டியே டிரா செய்யும் நோக்கிலேயே களமிறங்கியது.
ரோஹித், ராகுல், கோலி மூவரும் விரைந்து விக்கெட்டுகளை விட 33/3 என இந்தியா சரிந்த போது ஜெஸ்வால் – பண்ட் இருவரும் நிலைத்து நின்றனர். போட்டியை இந்தியா நிச்சயம் டிரா செய்துவிடும் என நம்பிக்கை வந்த போது பண்ட் தேவை இல்லாத ஷாட்டுக்கு சென்று விக்கெட்டை இழக்க போட்டி ஆஸ்திரேலியா பக்கம் சென்றது. மேற்கொண்டு இந்தியா வெறும் 34 ரன்களுக்கு மீதம் 6 விக்கெட்டுகளை விட்டு ஆல் அவுட் ஆனது.
பண்ட் விக்கெட்டை டிராவிஸ் ஹெட், ஒரு கையை மூடிக் கொண்டு ஒரு விரலை உள்ளே விட்டு விசித்திரமாக கொண்டாடினார். இது குறித்து போட்டி முடிந்த பிறகு பேட் கம்மின்ஸிடம் இந்திய செய்தியாளர்கள் ஒரு வித சங்கடத்துடன் கேட்டனர். உடனே பேட் கம்மின்ஸ் சிரித்துக் கொண்டே விளக்கம் அளித்தார்.
” நான் அதை உங்களுக்கு விளக்குகிறேன். அது மோசமான கொண்டாட்டம் அல்ல. டிராவிஸ் ஹெட் விரல் மிகவும் சூடாக இருக்கும், அதனை அவர் ஐஸ் தண்ணியில் நனைக்கும் விதத்தில் செய்கை காட்டினார். இது ஒரு ஜோக் தான். காப்பா போட்டியில் அவர் விக்கெட்டை இழந்த பின்னர் ரூமுக்கு வந்த உடனே தன் விரலை குளிர்சாதனப் பெட்டியில் நனைத்துவிட்டு நாதன் லயன் பக்கம் அமர்ந்தார். அது ஜோக்காக இருந்தது, மற்றப்படி வேறு எந்த அர்த்தமும் இல்லை. ” என ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் சொன்னார்.

