30 நிமிடம் 6 விக்கெட்.. சவால் விட்ட பங்களாதேஷ் அணி.. தக்க பதிலடி தந்து இந்திய அணி அபார வெற்றி

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பங்களாதேஷ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளைக் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப் பயணத்தின் முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது .

- Advertisement -

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் முன்னணி வீரர்களான கில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழக்க இந்தியா 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். அணியின் ஸ்கோர் 96 ரன்களாக இருந்தபோது 39 ரன்கள் எடுத்திருந்த ரிஷப் பண்ட் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து களம் இறங்கிய ராகுல் 18 ரன்களிலும் சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 56 ரன்களிலும் ஆட்டம் இழக்க 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.

- Advertisement -

இந்நிலையில் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாக விளையாடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். இவர்கள் இருவரும் ஏழாவது விக்கெட்டுக்கு ஜோடியாக 199 ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் இந்தியா சரிவிலிருந்து மீண்டதோடு டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு முன்னேறியது. சிறப்பாக ஆடிய அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் தனது ஆறாவது சதத்தை பதிவு செய்தார். ரவீந்திர ஜடேஜா அபாரமாக விளையாடி அரை சதம் எடுத்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 339 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்திருந்தது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா 86 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து ஆகாஷ் தீப் 17 ரன்களில் அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய அஸ்வின் 133 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 113 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் ஹசன் மக்மூத் 5 விக்கெட்டுகளும் தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து இரண்டாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்பாக பங்களாதேஷ் அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது பங்களாதேஷ் அணியின் துவக்க வீரர் சத்மான் இஸ்லாம் முதல் ஓவரிலேயே 2 ரன்கள் எடுத்த நிலையில் ஜஸ்பிரீத் பும்ரா பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இவரைத் தொடர்ந்து மற்றொரு துவக்க வீரரான ஜாகிர் ஹசன் 3 ரன்னிலும், முமீனுல் ஹக் ரன் எதுவும் எடுக்காமலும் ஆகாஷ் தீப் பந்து வீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினர். இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது பங்களாதேஷ் அணி 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.

- Advertisement -

உணவு இடைவேளைக்குப் பின் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்து இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. அந்த அணியின் அனுபவ வீரர் ஷகீப் அல் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினர். எனினும் பங்களாதேஷ் அணியால் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. லிட்டன் தாஸ் 22 ரன்னிலும் ஷகீப் 32 ரன்னிலும் ஆட்டம் இழக்க பங்களாதேஷ் அணியால் சரிவிலிருந்து மீள முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து அந்த அணி தங்களது முதல் இன்னிங்சில் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக பந்து வீசிய பும்ரா 50 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மேலும் முகமது சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். பங்களாதேஷ் அணி ஃபாலோ ஆன் ஆனாலும் சென்னையில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக இந்தியா மீண்டும் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் சொதப்பிய ரோஹித் சர்மா இரண்டாவது இன்னிங்ஸிலும் 5 ரன்களில் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும் விராட் கோலி 17 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

இவர்களுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் இருவரும் சிறப்பாக விளையாடி இந்திய அணியை ஆரம்ப சரிவிலிருந்து மீட்டனர். இதனால் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்திருந்தது. இதனைத் தொடர்ந்து தங்களது மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினாலும் அதன் பிறகு அதிரடி பாணியை கடைப்பிடித்தது. இதனால் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் தங்களது அரை சதத்தை கடந்தனர். சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் திரும்பிய ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி டெஸ்ட் போட்டிகளில் தனது ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்தார். இவர் 128 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் டெஸ்ட் போட்டிகளில் மற்றொரு சதத்தை பதிவு செய்தார். இந்நிலையில் இந்தியா 287 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்திருந்த போது டிக்ளேர் செய்தது. சுப்மன் கில் 119 ரன்களிலும் கேஎல் ராகுல் 22 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணிக்கு வெற்றி இலக்காக 515 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை பங்களாதேஷ் அணி சிறப்பாக தொடங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர். அப்போது 32 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த ஜாகிர் ஹசன் 32 ரன்களில் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து மற்றொரு துவக்க வீரர் சத்மான் இஸ்லாம் 35 ரன்னிலும் முமீனுல் ஹக் 13 ரன்னிலும் அவுட் ஆகினர். மேலும் அனுபவ வீரர் முஸ்பிகுர் ரஹீம் 13 ரன்னிலும் அஸ்வின் சுழலில் ஆட்டம் இழந்தனர். இதனால் பங்களாதேஷ் அணி மூன்றாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 158 ரண்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியின் கேப்டன் நஜ்முல் ஹுசைன் சாண்டோ சிறப்பாக விளையாடி அரை சதம் எடுத்தார். எனினும் அந்த அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். அனுபவ வீரர் ஷகீப் அல் ஹசன் 25 ரன்னிலும், லிட்டன் தாஸ் 1 ரன்னிலும் மெஹதி ஹசன் 8 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இறுதியில் சிறப்பாக ஆடிவந்த சான்டோ 82 ரன்களில் அவுட் ஆனார். மேலும் பின் வரிசை ஆட்டக்காரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்ததால் பங்களாதேஷ் அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இன்று போட்டி தொடங்கிய நேரம் முதல் பங்களாதேஷ் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் சான்டோ அதிரடியாக ஆட அனுபவ வீரர் ஷகிப் அல் ஹசன் நிதானமாக விளையாடி வந்தார். இவர்கள் இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடியாக 52 ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடியின் ஆட்டம் இந்திய அணிக்கு சற்று தலைவலியாக அமைந்தது. எனினும் ஷகீப் அல் ஹசன் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றியதை தொடர்ந்து பங்களாதேஷ் அணியினர் இந்தியாவின் சுழற் பந்து ஜோடி அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஆட்டம் இழந்தனர். ஒரு கட்டத்தில் 196 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்திருந்த பங்களாதேஷ் அணி அடுத்த 30 நிமிடங்களில் மீதமுள்ள 6 விக்கெட்டுகள் இழந்து ஆல் அவுட் ஆனது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருக்கிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி சதம் எடுத்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசி 88 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மேலும் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும் ஜஸ்ப்ரீத் பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிகள் பட்டியலில் தங்களது முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது. இந்தப் போட்டியில் சிறப்பாக சதம் அடித்ததோடு இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் கைப்பற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles