இந்திய அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்து வித ஃபார்மர்கலிளும் விளையாடுகிறது. டி20ஐ தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இன்று கே.எல்.ராகுல் தலைமையிலான அணி முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கியது.
சீனியர் வீரர்கள் ரோஹித், கோலி, பும்ரா, ஷமி, பாண்டியா உள்ளிட்டோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஜோகன்னஸ்பர்க் மைதானத்தை தென்னாபிரிக்கா வீரர்களும் ரசிகர்களும் பின்க் ஜெர்சியில் வண்ணம் தீட்டினர். எப்போதெல்லாம் தென்னாபிரிக்கா பின்க் உடையை அணிந்து ஆடுகிறதோ அப்போதெல்லாம் பெரிய ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது என வரலாறு உண்டு.
கடும் சவாலான போட்டியை நம் இந்திய இளம் வீரர்கள் சிறப்பாக சுலபமாக கையாண்டுள்ளார்கள். டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணித் தலைவர் மார்க்ரம் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்தியப் பந்துவீச்சாளர்கள் அர்ஷதீப் சிங் மற்றும் அவேஷ் கானின் வேகத்தை சமாளிக்க இயலாமல் அடுத்தடுத்து பெவிலியன் சென்றனர்.
துவக்க வீர் ஹென்றிக்ஸ், வான்டர் டசென் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேற தென்னாபிரிக்கா துவக்கத்திலேயே சரிவைச் சந்தித்து. கேப்டன் மார்கரம் 12 ரன்கள் மற்றும் ஜோர்சி 28 ரன்கள் சேர்த்து ஓரளவு சமாளித்தனர் ஆனால் பெரிதாகக் கொண்டுச் செல்ல இயலவில்லை. மில்லர், க்ளாசன் வந்த வேகத்தில் கிளம்ப 58/7 என பெரிய சரிவுக்கு அணி தள்ளப்பட்டது.
ஆல்ரவுண்டர் பெலுக்வாயோ போராடி 33 ரன்கள் எடுத்து அணியை 100 ரன்கள் கடக்க உதவி செய்தார். 27.3 ஓவரில் 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென்னாபிரிக்கா டாப் ஆர்டரை தவிடு பொடியாக்கிய அர்ஷதீப் சிங் 10 ஓவரில் 37 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி தன் சிறந்த பவுலிங் பெர்மபாமன்ஸை பதிவு செய்தார். அவருக்கு ஜோடியாக மிகவும் அழுத்தம் கொடுத்து சிறப்பாக பந்துவீசிய ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்த இன்னிங்ஸ் மூலம் இந்திய அணி பல்வேறு சாதனைகளை பதிவு செய்துள்ளது. தென்னாபிரிக்கா அணியை அவர்களது ஆடுகளத்தில் குறைந்த ஸ்கோருக்கு ஆல் அவுட் செய்த பெருமையை பெற்றுள்ளது. இதற்கு முன்பும் இந்த சாதனையை இந்திய அணியே நிகழ்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக 5 விக்கெட் ஹால் எடுத்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை தன் வசபடுதியுள்ளார் அர்ஷதீப் சிங்.
எளிய இலக்கை நோக்கி இந்திய இளம் இரத்தம் களமிறங்கியது. உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ருத்துராஜால் சர்வதேச அளவில் ஃபார்மை தக்கவைத்துக் கொள்ள இயலவில்லை. முல்டர் பந்துவீச்சில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன் – ஷ்ரேயாஸ் ஐயர் நிலைத்து ஆடி எளிதாக வெற்றியை அடைந்தனர்.
தமிழக வீரர் சாய் சுதர்ஷன் 9 பவுண்டரிகள் விளாசி 55 ரன்களுடன் தன் சரவ்தேச அரை சதத்தை பதிவு செய்தார். அறிமுகப் போட்டியில் அரை சதம் விளாசும் 17வது இந்திய வீரர் ஆவார். மறுபக்கம் ஷ்ரேயாஸ் ஐயர் 52 ரன்கள் சேர்த்தார். எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிப் பெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது. அனைத்துப் பாராட்டுகளும் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்கள் பெயரில்.

