பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மூன்றாவது டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து, ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்து, மறுநாளே வீட்டிற்கு திரும்பினார். இந்த நிகழ்வானது கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.
தற்போது, இந்த நிகழ்வை குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அனில் கும்ப்ளே, “அஸ்வின் பிரம்மாண்டமாக வழி அனுப்ப தகுதியானவர்” என்றும், அவருக்கு ஓய்வு பெறுவதற்கான ஒரு திட்டம் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.
அவரே எப்படிஅனுப்பி இருக்க வேண்டும் தெரியுமா:
அனில் கும்ப்ளே, “அஸ்வின் நீண்ட காலமாகவே இந்தியா கிரிக்கெட் அணிக்கு பங்களித்த வீரர், எனவே அவரே பிரம்மாண்டமாக வழி அனுப்பி இருக்க வேண்டும். இந்திய நிர்வாகம் அவரிடம் பேசி, அவர் எந்த விதத்தில் கிரிக்கெட்டை விட்டு வழி அனுப்ப விரும்புகிறார் என கேட்டிருக்க வேண்டும். அஸ்வின் விடை பெற்ற விதம் குறித்து நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்.”
முந்தைய காலங்களில் பல கிரிக்கெட் வீரர்கள் விடைபெறும் விழா என்ற வாய்ப்பை இழந்தனர். ஆனால், அஸ்வின் அமைத்துள்ள புகழே எவரும் எளிதில் அடைய முடியாது. அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகுந்த மகத்தான சேவை செய்தார்.”
என்னுடைய சாதனையை முறியடிப்பார் என்று நினைத்தேன்:
மேலும் அவர், “அஸ்வின் 500 விக்கெட்டை கடந்த பொழுது நான் அவரிடம் நீ இனி 600 விக்கெட்டை எடுக்க வேண்டும், அதன் பிறகு என்னுடைய சாதனையான 619 விக்கெட்டையும் கடக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். அவர் எவ்வாறு விளையாடிக் கொண்டிருந்தாரோ, அதன்படி அவருக்கு மிகவும் நல்ல வாய்ப்பு இருந்தது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக செயல்படவில்லை, ஆனால் அந்த நிகழ்வானது அவரது கிரிக்கெட் வாழ்க்கையான 14 ஆண்டுகளில் ஒரே ஒருமுறை மட்டுமே நடந்தது,” என்று கும்ப்ளே கூறினார்.
அஸ்வின், கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் இரண்டாவது அதிக விக்கெட் எடுத்த வீரராக ஓய்வு பெற்றுள்ளார். கும்ப்ளே, 619 விக்கெட்டுகளுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றார், அதேபோல் அஸ்வின் 537 விக்கெட்டுகளை எடுத்த பிறகு தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றார்.

