இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி தொடர் தற்போது பேசு பொருளாகி இருக்கிறது. 3 போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடர் துவங்குவதற்கு முன்பு இந்திய அணி எளிதாக போட்டியை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த சூழலில் முதலாவது ஒரு நாள் போட்டி சமனில் முடிவடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கிரிக்கெட் உலகையே அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. நேற்றைய போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜெஃப்ரி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார்.
முதல் போட்டியிலும் அவர் ஹசரங்கா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். விராட் கோலியின் கிரிக்கெட் கேரியரில் அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆவது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது விராட் கோலி எடுத்த டிஆர்எஸ் பற்றி சர்ச்சையான கருத்தை பதிவு செய்து இருக்கிறார் இந்தியாவின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.
நேற்றைய போட்டியில் அகிலா தனஞ்செயா வீசிய 15 வது ஓவரில் விராட் கோலி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழந்ததாக கள நடுவர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து விராட் கோலி டிஆர்எஸ் எடுத்தார். அப்போது பந்து பேட்டில் பட்டதாக ஸ்நிக்கோ மீட்டரில் ஸ்பைக் தோன்றியது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது நடுவர் கள நடுவரின் முடிவை திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தினார். இதன் பிறகு விராட் கோலிக்கு கொடுக்கப்பட்ட அவுட் திரும்ப பெறப்பட்டது.
இந்த முடிவிற்கு இலங்கை அணியின் வீரர்கள் களத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தனர். இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் குசால் மெண்டிஸ் தன்னுடைய ஹெல்மெட்டை கோவத்தில் வீசினார். மேலும் இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா கள நடுவர்களிடம் விவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக தனது யூடியூப் சேனலில் ஆகாஷ் சோப்ரா சர்ச்சையான கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
விராட் கோலியின் டிஆர்எஸ் குறித்து பேசி இருக்கும் ஆகாஷ் சோப்ரா “அகிலா தனஞ்செயா வீசிய பந்து விராட் கோலியின் கால் காப்பில் பட்டது. இதனைத் தொடர்ந்து நடுவர் அவுட் என அறிவித்தார். விராட் கோலி உடனடியாக டிஆர்எஸ் எடுத்தார். ஆனால் பந்து மட்டையில் படவில்லை என்பது விராட் கோலிக்கும் தெரியும்” எனக் கூறியிருக்கிறார். அவரது மட்டையில் பந்து படவில்லை என்று தெரிந்தும் ஏன் டிஆர்எஸ் எடுத்தார் எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மேலும் இந்த போட்டி குறித்து தொடர்ந்து பேசிய ஆகாஷ் சோப்ரா இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் சுமாராகத்தான் பந்து வீசினார்கள். ஆனாலும் நாம் அவர்களிடம் தோற்று இருக்கிறோம். இந்திய அணி அதிகமாக பேட்டிங்க்கு சாதகமான ஆடுகளங்களில் விளையாடுவது தான் இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார். அதிகம் தட்டையான ஆடுகளங்களில் விளையாடிவிட்டு திடீரென பந்து திரும்பும் ஆடுகளங்களில் விளையாடும் போது அந்த சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் வீரர்கள் தொடர்ந்து அவுட்டாகி வெளியேறுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

