இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. இன்னும் இரண்டு டி20 போட்டிகள் மீதம் உள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த போட்டியில் தான் சந்தித்த முதல் பந்தியிலேயே டக் அவுட் ஆகி வெளியேறியது பெரிய விமர்சனத்தை உண்டாக்கி இருக்கிறது.
அதேசமயம் மறுமுனையில் இஷான் கிஷன் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் டி20 உலக கோப்பையில் இஷான் கிஷன் சாம்சன் பதில் இடம்பெறுவார் என்றும் தகவல்கள் பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் ரகானே சாம்சன் எப்படி விளையாட வேண்டும் என்று சில ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். அதாவது எதிர் முனையில் விளையாடும் அபிஷேக் சர்மாவை பார்க்காமல் அவர் தனது சொந்த பாணியில் விளையாட வேண்டும் என்று பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “சஞ்சு சாம்சன் மறுமுனையில் விளையாடும் அபிஷேக் சர்மாவை பார்த்து விளையாடாமல் தனது சொந்த பாணியில் விளையாட வேண்டும். உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் எப்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறாரோ அதேபோல சர்வதேச போட்டிகளிலும் விளையாட வேண்டும் அவர் தனது ஆட்ட பாணியை மாற்றக்கூடாது. அவர் தன்னை மற்றொரு வீரருடன் ஒப்பிட்டு விளையாடினால் அது சரியானதாக இருக்காது. அவர் இயல்பான நிலையில் விளையாடினால் நிச்சயம் மீண்டும் அவரால் கம் பேக் கொடுக்க முடியும்” என்று பேசி இருக்கிறார்.

