தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியானது நேற்று நடைபெற்றது. இதில், இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் தொடரை 3-1 எனக் கைப்பற்றியது.
போட்டி முடிவில், ஆட்டநாயகன் விருதை திலக் வர்மா பெற்றார். மேலும் அவர், “100 ரன்களை நான் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை ….. ” என கூறியிருந்தார்.
இரு அணிகளின் நிலவரம் என்ன?
நேற்று, டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி வீரர்களான சஞ்சு சான்சன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் ஜோடி சேர்ந்து தென்னாப்பிரிக்காவின் பவுலிங்கே விளாசி எடுத்தனர்.
இதில், சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 9 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 109 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 47 பந்துகளில் 10 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 120 ரன்கள் எடுத்தார். இருவருமே கடைசிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்தது.
தென் ஆப்பிரிக்கா அணியானது 284 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற மிக பெரிய இலக்கை நோக்கி பேட்டிங்கை தொடங்கியது. ஆனால்,இந்தியாவின் பந்துவீச்சை தென் ஆப்பிரிக்கா அணி எதிர்க்க முடியவில்லை, எனவே விக்கெட்டுகள் ஒன்றப்பின் ஒன்றாக வீழ்ந்தன. இருப்பினும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி சிறப்பாக விளையாடியது, ஆனால் அவர்களாலும் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
18.2 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்களை மட்டும் எடுத்தது, இதனால் இந்தியா 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
திலக் வர்மா, நெகிழ்ச்சி:
போட்டி முடிவில் பேசிய திலக் வர்மா கூறியதாவது, “உண்மையில், நான் ஒரு வேடிக்கையான விஷயத்தைச் சொல்லட்டுமா, கடந்த ஆண்டு இங்கு விளையாடினபோது எனது முதல் பந்திலே டக்அவுட் ஆகிவிட்டேன். இந்த ஆட்டம் அணியின் வெற்றிக்கும் தொடரின் வெற்றிக்கும் மிகவும் முக்கியமானது. எனவே, நான் கடைசியாக விளையாடிய போட்டியில் என்ன செய்தேனோ அதையே இன்றும் செய்ய திட்டமிட்டேன்”.
கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்:
மேலும் அவர் கூறியதாவது, “என்னால் உணர்வை கட்டுப்படுத்த கூட முடியவில்லை ஆனாலும் நான் அமைதியாக இருந்தேன், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நான் 100 ரன்களை அடிப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. எனக்கு இந்த வாய்ப்பை அளித்த கேப்டன் சூரியகுமார் யாதவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடைசி போட்டியில் நான் கூறியபடி, கடந்த சில ஆட்டங்களில் எனக்கு காயம் ஏற்பட்டிருந்தது. நான் இறைவன் மீதும் என் திறமை மீதும் நம்பிக்கை உடையவன். ஆதலால் தான் இந்த வெற்றியை இறைவனுக்கு அர்ப்பணித்தேன்” என்று கூறி முடித்தார்.

