17வது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் துபாயில் நடைபெற்றது. இந்த மினி ஏலத்தில் 333 வீரர்கள் கொண்ட பட்டியல் இறுதியான நிலையில், அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கும், பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கும், ஹர்சல் படேல் ரூ.11.75 கோடிக்கும் வாங்கப்பட்டனர். அதேபோல் இளம் வீரர்கள் அமீர் ரிஸ்வி ரூ.8.40 கோடிக்கும் வாங்கப்பட்டார்.
சிஎஸ்கே, மும்பை, லக்னோ, கேகேஆர் உள்ளிட்ட அணிகள் ஏலத்தில் போக்கை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தன. வழக்கத்திற்கு மாறாக ஆர்சிபி அணி நிர்வாகம் மிக்சர் சாப்பிட்டு கொண்டு கிடைத்த வீரர்களை வாங்கியது. அதேபோல் பஞ்சாப் மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் அனைத்து வீரர்களுக்கும் கைகளை உயர்த்தி திட்டமில்லாமல் வாங்கி குவித்தது.
அதிர்ச்சியளிக்கும் வகையில் வெளிநாட்டு வீரர்கள் ஏராளமானோர் குறைந்த விலைக்கும், சில விற்கப்படாமலும் சென்றனர். அதில் முக்கியமான வீரர் இங்கிலாந்து அணியின் பில் சால்ட். ஐபிஎல் ஏலத்திற்கு 2 நாட்களுக்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் அபாரமாக விளையாடி 56 பந்துகளில் 109 ரன்களை விளாசினார்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 4வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 267 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய பில் சால்ட் 57 பந்துகளில் 10 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 119 ரன்களையும், பட்லர் 29 பந்துகளில் 55 ரன்களையும் விளாசினர்.
கடைசி நேரத்தில் களமிறங்கிய லிவிங்ஸ்டோன் 21 பந்துகளில் 4 சிக்ஸ், 4 பவுண்டரி விளாசி 54 ரன்களை விளாசினார். இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 15.3 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக அதிரடி வீரர் ரஸல் 25 பந்துகளில் 51 ரன்களையும், ஷெர்ஃபானே ரூதர்போர்ட் 15 பந்துகளில் 36 ரன்களையும் விளாசினர்.
இதனால் இங்கிலாந்து அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி வெற்றியை பெற்றது. ஆட்டநாயகனாக சதம் விளாசிய பில் சால்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய ஆடுகளங்களை ஓரளவு ஒத்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அதிரடியாக 2 சதங்களை விளாசியும் பில் சால்ட் ஐபிஎல் அணிகளால் வாங்கப்படவில்லை.
இது ஏன் என்று புரியாமல் ரசிகர்கள் பலரும் குழம்பியுள்ளனர். பஞ்சாப் அணி தரப்பில் ஃபார்மில் ரைலி ரூசவ் உள்ளிட்ட பேட்ஸ்மேன்களுக்கு கொட்டி கொடுக்கப்பட்ட நிலையில், அடிப்படை விலைக்கே பில் சால்ட் போன்ற வீரர்களை வாங்க முன் வராதது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

