இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நாளை விளையாட உள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ள இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ஏற்கனவே இதுவரை நடந்த 2 போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றியை பெற்று 1-1 என்ற நிலையில் உள்ளது.
இந்திய அணியுடன் தீபக் சஹர்
இந்த போட்டியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா களமிறங்க உள்ளார். இதற்காக கடந்த 2 நாட்களாக பும்ரா தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். அதேபோல் லார்ட்ஸ் மைதானத்தில் இம்முறை கொஞ்சம் புற்கள் தென்படுகிறது. இதனால் முதல் 2 நாட்களுக்கு பிட்சில் நல்ல ஸ்விங் இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர்.
கடந்த முறை பிளாட் பிட்ச் கொடுத்ததால், இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்தது. இதனால் சிறிது ஸ்விங்குடன் பிட்சை தயாரிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் இந்திய அணி வீரர்களுடன் மும்பை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹர் பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தில் முகாமிட்ட அவர், திடீரென இந்திய அணியுடன் இணைந்து பயிற்சி பெற்றிருக்கிறார்.
தீபக் சஹர் லண்டன் வந்தது எப்படி?
புதிய பந்தில் தீபக் சஹர் மிகச்சிறப்பாக ஸ்விங் செய்வார் என்பதால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு இது சிறந்த பயிற்சியாக இருக்கும். குறிப்பாக தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல், ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு இது நல்ல பயிற்சியாக இருக்கும். இந்திய அணியுடன் தீபக் சஹர் பயிற்சி மேற்கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
விம்பிள்டன் போட்டியை பார்க்க தீபக் சஹர் தனது மனைவியுடன் லண்டன் வந்திருந்தார். அவருக்கு மெசேஜ் அனுப்பி கம்பீர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அழைத்திருக்கின்றனர். இதன்பின் இந்திய அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். கடந்த போட்டிக்கு முன்பாக பஞ்சாப் அணியின் ஹர்ப்ரீத் ப்ரார் இந்திய அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டது முக்கியத்துவம் பெற்றது.

