ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி t20, ஒருநாள் தொடரை வென்றதை அடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ரன் மழை பொழிந்தது. இரண்டு அணிகளுமே 500 ரன்கள் அடித்து அசத்தியதால் முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிவடைந்தது.
இந்த நிலையில் தொடரை தீர்மானிக்க கூடிய இரண்டாவது டெஸ்ட் போட்டி புல்வாயோ நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கில் தடுமாறியது. அதிகபட்சமாக ரஷித் கான் மட்டும் 25 ரன்கள் சேர்க்க முதல் இன்னிங்ஸில் அந்த அணி 157 ரன்களில் சுருண்டது.
இதனை அடுத்து ஜிம்பாப்வே அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடியது. இதில் சிக்கந்தர் ராசாழ் எர்வின் ஆகியோர் அரைசதம் அடிக்க அந்த அணி 243 ரன்கள் சேர்த்தது. இதனை அடுத்து 86 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
முதல் இன்னிங்சில் சொதப்பிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக ரஹ்மத்ஷா தனி ஆளாக நின்று அபார சதம் விளாசினார். இதேபோன்று மற்ற வீரர்கள் தடுமாறிய நிலையில் இறுதியில் களமிறங்கிய இஸ்மாத் ஆலம் 101 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 363 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் ஜாய் லார்ட் 15 ரன்களும் பென்கரண் 38 ரன்களும் எடுத்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிக்கந்தர் ராசா 38 ரன்களில் வெளியேற, ஆட்டத்தில் விறுவிறுப்பு தொற்றி கொண்டது. இதை அடுத்து மற்ற ஜிம்பாப்வே அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்ம் தனி ஆளாக நின்று எர்வின் மட்டும் அரை சதம் அடித்து ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்காக போராடினார். எனினும் கிரேக் ஏர்வின் கடைசி விக்கெட்டுக்கு ஆட்டம் இழக்க, ஜிம்பாப்வே அணி 25 ரன்களில் ஆட்டம் இழந்தது.
இதன் மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தொடரை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தத் தொடரில் 392 ரன்கள் குவித்த ரஹ்மத் ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.

