இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5வது டி20ஐ போட்டி மும்பையில் நடந்தது. தொடரை 3-1 என ஏற்கனவே இந்திய கைப்பற்றிவிட்ட போதிலும் கடைசிப் போட்டியில் இங்கிலாந்துக்கு இரக்கம் காட்டாமல் மரண அடி அடித்து பிரம்மாண்ட வெற்றிப் பெற்றுள்ளது.
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பட்லர் முதலில் பந்துவீச முடிவெடுத்தார். இந்திய துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா வானவேடிக்கை காட்டி அதிரடி செய்தார். 10வது ஓவரில் 37 பந்துகளில் இரண்டாவது அதிவேக சதத்தைப் பதிவு செய்தார் அபிஷேக். 7 பவுண்டரி, 13 சிக்சர் என மொத்தம் 135 ரன்கள் விளாசி ருத்ரதாண்டம் ஆடினார்.
டி20ஐ போட்டிகளில் இந்திய வீரரின் அதுகட்ச ஸ்கோர் (135) இதுவே. ஒரு டி20ஐ இன்னிங்சில் அதிக சிக்சர்கள் (13) விளாசியவர் இப்போது அபிஷேக். மேலும் இதில் பவுண்டரிகள் மூலம் 106 ரன்கள் அடித்து ரோகித்துக்கு (108) அடுத்து உள்ளார். இந்த இன்னிங்ஸ் மூலம் பல்வேறு சாதனைகள் நொறுக்கப்பட்டுள்ளது.
மற்ற இந்திய வீரர்கள் சாம்சன் 16, திலக் வர்மா 24, டூபே 30 என வேக வேகமாக பவுண்டரி & சிக்சர் விளாசி விலகினர். 20 ஓவரில் 248 ரன்கள் குவித்தது இந்திய அணி. இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 2/32 மற்றும் கார்ஸ் 3/38 ஒரு பக்கம் இழுத்துப் பிடித்து பந்துவீசினர். மறுபக்கம் ஆர்ச்சர் 4 ஓவரில் 1/55 என மற்றுமொரு முறை தாக்கப்பட்டார். ஆதில் ரஷீத், ஜேமி ஓவர்டன் ஆகியோரும் ரன்களை வாரி வழங்கினர்.
249 எனும் சவாலான இலக்கை துரத்த இங்கிலாந்து ஒப்பனர்கள் களமிறங்கினர். இந்தத் தொடரில் பெரிதாக பாதிப்பு ஏற்படுத்த தவறிய சால்ட் இந்தத் போட்டியில் அதைச் செய்துவிட்டார். ஒரு பக்கம் அவர் பவுண்டரி, சிக்சர் என விளாசிய மறுபக்கம் இங்கிலாந்து வீரர்கள் வரிசையாக நடையைக் கட்டினார்கள். டக்கெட் 0, பட்லர் 7, புரூக் 2, லிவிங்ஸ்டன் 9, பெத்தேல் 10, கார்ஸ் 3, ஓவர்டன் 1 என அனைவரும் சொற்ப ரன்களில் வந்த வேகத்தில் கிளம்பினர். இந்திய தரப்பில் ஷமி 3, அபிஷேக், வருண், டூபே ஆகியோர் 2 மற்றும் பிஷனாய் 1 விக்கெட் எடுத்தனர்.
சால்ட் 23 பந்தில் 55 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை பறி கொடுத்தார். இங்கிலாந்து வெறும் 10.3 ஓவர்களில் 97 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் விட்டு 150 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. டி20ஐ போட்டிகளில் மிகப் பெரிய வித்தியாசத்தில் தோல்வி பெரும் அணிகள் பட்டியலில் இங்கிலாந்து இரண்டாவது இடத்தில் இணைந்துள்ளது.
பேட்டிங்கில் அதிரடி காட்டியதோடு பவுலிங்கில் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் எடுத்த அபிஷேக் ஷர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். சொந்த மண்ணில் தொடர்ந்து 17வது முறை இந்தியா டி20ஐ தொடரைக் கைப்பற்றியுள்ளது.

