நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை அனுபவங்கள் தனக்கு சிறந்த விஷயங்களை கற்றுக் கொடுத்திருப்பதாகவும், தன்னுடைய குரு யுவராஜ் சிங் சொன்ன ஒரு விஷயத்தை தொடர்ந்து தான் பின்பற்றி வருவதாகவும் அபிஷேக் ஷர்மா கூறியிருக்கிறார்.
இந்த உலகக் கோப்பை தொடரில் யாரும் செய்யாத மோசமான சாதனையாக முதல் மூன்று போட்டிகளில் அபிஷேக் ஷர்மா டக் அவுட் ஆனார். இந்த நிலையில் பல விமர்சனங்களில் இருந்து மீண்டு வந்து இறுதிப் போட்டியில் 18 பந்தில் அரை சதம் அடித்து அணி வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
இதுகுறித்து அபிஷேக் ஷர்மா கூறும் பொழுது ” உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் நமக்கு பெரிய அனுபவங்களை கற்றுக் கொடுக்கிறது. ஒரு சிறந்த ஆட்டத்திற்கு பிறகு அதிக உற்சாகமடையாமலும், ஒரு மோசமான போட்டிக்கு பிறகு தளர்ந்து போகாமலும் இருக்க நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். மேலும் மன வலிமை மற்றும் செயல் திறன் எவ்வளவு முக்கியம் என உலகக் கோப்பை சொல்லிக் கொடுத்து விட்டது”
“எனக்கு நேர்மையான அறிவுரைகள் தேவை என்றால் யுவி பாஜியிடம் சென்று விடுவேன். ஒரு வீரராக நாம் யார் என்பதை மாற்றிக் கொள்ளக் கூடாது, அதிரடியாக விளையாடும் வீரர்களுக்கு இதுபோன்ற சூழ்நிலைகள் வரும், எனவே நம்முடைய திறமையில் நம்பிக்கை வைத்து தொடர்ந்து சென்றால் ரன்கள் கிடைக்கும் என்று சொன்னார். நான் அதைத்தான் பின்பற்றி வருகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

