ஐபிஎல் தொடரை பொருத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் சிஎஸ்கே விளையாடும் போட்டிகளில் தோனி விளையாடுவதற்காக மட்டுமே பார்க்க ஏராளமான ரசிகர்கள் வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் எம் எஸ் தோனி ஐபிஎல்லில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அபிஷேக் ஷர்மா சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார். இது குறித்து அவர் கூறும் போது “கடந்த ஐபிஎல் தொடரில் நான் பேட்டிங் செய்ய மைதானத்திற்கு சென்றேன். ஜட்டுபாய் பந்து வீச தயாராக இருந்தாரு. அப்போ என்னோட மனசுல ஒரு தெளிவான திட்டம் இருந்துச்சு. முதல் பந்திலோ அல்லது இரண்டாவது பந்திலோ அதை தாக்கி விளையாட வேண்டும் என்று நினைத்தேன். அப்போது அங்கு தோனி வித்தியாசமானவராக தெரிந்தார். ஜடேஜாவை பக்கத்தில் அழைத்து அவரது காதில் ஏதோ கிசுகிசுத்தார்.
அப்போது உடனே ஒரு ஃபீல்டர் எனக்கு நேராக நின்று கொண்டிருப்பதை பார்த்தேன். அது என்னை ஒரு நிமிடம் உலுக்க போதுமானதாக இருந்தது. அந்த நேரத்தில் அவர்கள் எனக்காக ஒரு சிறப்பு திட்டத்தை வைத்திருந்ததை நான் உணர்ந்தேன். அப்போது எனது திட்டம் முற்றிலுமாக மறைந்து விட்டது. அப்போது நான் தயார் செய்த தாக்குதல் ஷாட்டை விளையாடவில்லை. எச்சரிக்கை ஆகிவிட்டேன். ஆனால் அந்த தயக்கம் என்னுடனே இருந்தது. தோனி ஒரு வார்த்தை கூட பேசாமல் உருவாக்கும் உளவியல் தாக்கம் என்பது அதுதான்” என்று பேசி இருக்கிறார்.

