ஆசியக் கோப்பையில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா பவுலிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 31 பந்துகளில் 61 ரன்களை குவித்துள்ளார்.
ஹாட்ரிக் அரைசதம்
ஆசியக் கோப்பை தொடரில் அபிஷேக் சர்மாவின் ஹாட்ரிக் அரைசதம் இதுவாகும். இதற்கு முன்பாக சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக அபிஷேக் சர்மா அரைசதம் அடித்திருந்தார். கடந்த 2 அரைசதங்களை விடவும், இம்முறை 22 பந்துகளில் அரைசதம் அடித்து அதிரடி காட்டினார்.
இதன் டி20 கிரிக்கெட்டில் மூலமாக ஹாட்ரிக் அரைசதம் அடித்த 6வது இந்திய வீரர் என்ற பெருமையை அபிஷேக் சர்மா பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஆசியக் கோப்பை தொடரில் 6 இன்னிங்ஸில் ஆடியுள்ள அபிஷேக் சர்மா 309 ரன்களை குவித்துள்ளார். அதில் 31 பவுண்டரிகளும், 19 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலமாக பவுண்டரி மற்றும் சிக்சர்களின் எண்ணிக்கை 50ஆக உள்ளது.
அபிஷேக் சர்மா வரலாறு
இதன் மூலமாக அபிஷேக் சர்மா புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அதாவது ஒரு டி20 தொடரில் 50 பவுண்டரிகளை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்திருக்கிறார். இதற்கு முன்பாக 2009ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இலங்கை ஜாம்பவான் தில்ஷன் 46 பவுண்டரி, 3 சிக்ஸ் மூலமாக 49 பவுண்டரிகளை விளாசியதே சாதனையாக இருந்து வந்தது.
இந்த சாதனையை அபிஷேக் சர்மா முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். 16 ஆண்டுகள் சாதனையை முறியடித்துள்ள அபிஷேக் சர்மா ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த சாதனையை இலங்கை அணிக்கு எதிராக விளாசியது கூடுதல் சிறப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

