இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தற்போது சிவம் துபே உண்மையிலேயே ஒரு ஆல் ரவுண்டராக மாறிவிட்டார் என்றும், மேலும் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவரும் என்ன சவால்களை தனக்கு கொடுத்த பொழுதும் அதை மிகச் சிறப்பாக நிறைவேற்றி இருக்கிறார் என்றும் பாராட்டி பேசி இருக்கிறார்.
இந்த உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 33 பந்துகளில் 66 ரன்கள் எடுத்ததுடன் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றிய சிவம் துபே ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தினார். தற்போது ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்து இந்திய டி20 அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராகவும் உருவெடுத்து இருக்கிறார்.
தற்போதைய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் உடன் இணைந்து அவர் தனது பந்துவீச்சை மிகவும் மேம்படுத்தி விட்டார். குறிப்பாக அவர் 120 கிலோமீட்டர் வேகத்தில் வீசிக்கொண்டு இருந்ததை இப்பொழுது அதிகரித்து 130 கிலோ மீட்டர் வேகத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அபிஷேக் நாயர் கூறும் பொழுது ” நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிவம் துபாய் பந்து வீச்சின் வேகம் 130 கிலோ மீட்டரில் இருந்தது. நெதர்லாந்து வேகப்பந்துவீச்சாளர்களே இவ்வளவு வேகத்தில் தான் வீசினார்கள். சிவம் துபே தற்போது ஒரு ஆல்ரவுண்டர்காண வேகத்தை பிடித்து விட்டார். நான் அந்த போட்டியில் இதை கவனித்தேன். கம்பீர் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவர் கொடுத்த சவால்கள் எதுவாக இருந்தாலும் அதை மிகச் சிறப்பான முறையில் நிறைவேற்றி விட்டார்” என்று கூறி இருக்கிறார்.

