இலங்கை – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி இலங்கை அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ்-ன் கடைசி போட்டியாகும். இதனால் அவருக்கு கார்ட் ஆஃப் ஹானர் மரியாதை அளிக்கப்பட்டது. இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேசம் அணி முதல் இன்னிங்ஸில் 495 ரன்களை விளாசியது.
ஷான்டோ அபாரம்
வங்கதேச அணியின் கேப்டன் ஷான்டோ மற்றும் முஷ்ஃபிகுர் ரஹிம் ஆகிய இருவரும் சதம் விளாசி அசத்தினர். இதன்பின் களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 485 ரன்களை குவித்தது. இலங்கை அணி தரப்பில் நட்சத்திர வீரர் நிசாங்கா 187 ரன்களை விளாசி தள்ளினார். இதன்பின் 10 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் அணி.
2வது இன்னிங்ஸிலும் கேப்டன் ஷான்டோ அடித்த அபார சதம் காரணமாக வங்கதேச அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் கடைசி 2 செஷன்களில் இலங்கை அணி வெற்றிபெற 296 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 74 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து களத்தில் இருந்தது.
பாம்புடன் இருந்த ரசிகர்
அப்போது வங்கதேச அணியின் கேப்டன் ஷான்டோ மற்றும் இலங்கை அணியின் கேப்டன் தனஞ்செயா டி சில்வா ஆகிய இருவரும் கைகுலுக்கி கொண்டு டிரா செய்ய ஒப்புக் கொண்டனர். இதனால் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த போட்டியின் நடுவே மைதானத்தில் 2 பாம்புகள் மற்றும் ஒரு குரங்குடன் ரசிகர் ஒருவர் அமர்ந்து போட்டியை ரசித்து கொண்டிருந்தார்.
அவர் பக்கமாக கேமரா திரும்ப பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. எப்படி அவர் பாம்புகள், குரங்குடன் மைதானத்திற்குள் வந்தார் என்று அதிர்ச்சி அடைந்தனர். இலங்கை மைதானங்களில் வழக்கமாக பாம்புகள் சுற்றிக் கொண்டிருக்கும். ஆசியக் கோப்பையின் போது கூட போட்டிக்கு இடையே பாம்புகள் ஊர்ந்து சென்றது வியப்பை ஏற்படுத்தியது.