ஐபிஎல் 2024க்கான மினி ஏலமானது, அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், இதற்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்துள்ளது. எனினும் தற்போது ஏலத்தை ஒரு பெண் நடத்த விருப்பது இன்னும் சுவாரசியத்தை அதிகரிக்கிறது.
2024ம் ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் தொடர் நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கான மினி ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. புதிய வீரர்களை ஏலத்தில் எடுக்க ஐபிஎல் அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. பொதுவாக ஐபிஎல் ஏலம் ரிச்சர்ட் மேட்லி அல்லது ஹக் எட்மீட்ஸ் ஆகியோர் நடத்துவார்கள்.
இருப்பினும் 2022 மெகா ஏலத்தின் போது “போஸ்டுரல் ஹைபோடென்ஷன்” காரணமாக ஹக் எட்மீட்ஸ் மேடையிலேயே மயங்கி விழுந்தார். இதனால் அவர் உடல் நிலைக் கருத்தில் கொண்டு, அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க பிசிசிஐ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பிப்ரவரியில் பெங்களூருவில் நடந்த மெகா ஏலத்தின் போது எட்மீட்ஸ் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட அவருக்கு பதிலாக சாரு சர்மா பிசிசிஐ வேண்டுகோளின் பேரில் ஐபில் ஏலத்தை நடத்தினார்.
இந்நிலையில் 2024க்கான ஏலத்தை நடத்தப் போவது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ள நிலையில், தற்போது அந்த கேள்விக்கான தகவலைக் கொடுத்துள்ளது பிசிசிஐ. அதுவும் ஒரு பெண் ஏலத்தில் தலைமை தாங்குவது இதுதான் முதல்முறை.
மும்பையைச் சேர்ந்த பெண்மணியான, மல்லிகா சாகர் என்பவர் தான் ஏலத்தை நடத்துகிறார். இவர் 2021ம் ஆண்டு புரோ கபடி ஏலத்தை ஏற்கனவே நடத்தியவர். அதனால் இவர் ஏலத்திற்கு புதியவர் அல்ல. மேலும் அவர் இந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் முக்கிய பங்கு வகித்தார்.
இவரது இந்தப் பயணம் 2001ம் ஆண்டு புகழ்பெற்ற பிரிட்டிஷ் ஏல நிறுவனமான கிறிஸ்டியில் தொடங்கியது. இதுகுறித்து மல்லிகா சாகர், மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தை நடத்த வழங்கியதற்காக முன்னர் நடைபெற்ற ஒரு நேர்காணலில் பிசிசிஐக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
இது குறித்த அவர் கூறுகையில்,
” இந்திய பெண்கள் தகுதி தற்போது சர்வதேச அரங்கில் உயர்ந்துள்ளது.
அவர்கள் மிகவும் உயர்ந்த நிலையில் விளையாடும் திறனைப் பெறுவார்கள். நம் முன்னேற்றம் மேலும் உயர வேண்டும். இந்திய பெண்களின் தகுதி உலகமே அறியும்” என்று கூறினார்.
ஐபிஎல் 2024 ஏலத்தில் மொத்தம் 1166 வீரர்கள் பதிவு செய்துள்ளனர், இதில் 830 இந்திய வீரர்கள் மற்றும் 336 வீரர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். அணிகள் தங்களிடம் உள்ள மீத பணத்திற்கேற்ப வீரர்களை வாங்க முயற்சிக்கும்.

