வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 518 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் சதம் விளாசினர். இதன்பின் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.
அசத்திய வெஸ்ட் இண்டீஸ்
இதனையடுத்து இந்திய அணி ஃபாலோ ஆன் கொடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் பேட்டிங் செய்ய களமிறங்கியது. 3வது நாளிலேயே பாதி விக்கெட்டை இழப்பார்கள் என்று நினைத்த போது, கேம்பெல் – ஹோப் இருவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதில் கேம்பெல் 115 ரன்களும், ஹோப் 103 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 390 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பின்னர் இந்திய அணியின் வெற்றிக்கு 121 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 4வது நாள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் நாளைய ஆட்டத்தில் இந்திய அணி எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாதனை படைத்த 2 பேட்ஸ்மேன்கள்
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் போராட்டம் ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதேபோல் 2வது இன்னிங்ஸில் இந்திய அணி மண்ணில் 2 வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் சதம் விளாசி புதிய வரலாறு படைத்துள்ளனர். அதாவது 1974ஆம் ஆண்டு பெங்களூரில் நடந்த டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் கார்டன் க்ரீனட்ஜ் மற்றும் கிளைவ் லாய்ட் இருவரும் சதம் விளாசி அசத்தினர்.
அதன்பின் கடந்த 51 ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் 2 பேட்ஸ்மேன்கள் ஒருமுறை கூட 2வது இன்னிங்ஸில் சதம் அடிக்கவில்லை. இந்த சாதனையை கேம்பெல் மற்றும் ஹோப் இருவரும் சமன் செய்துள்ளனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக ஆடி இருப்பதாக அந்நாட்டு ஜாம்பவான்களும் பாராட்டி வருகின்றனர்.

