இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் அக்டோபர் 2ம் தேதி தொடங்குகிறது. ஏற்கனவே டெஸ்ட் அணியில் ஆடும் வீரர்கள் பயிற்சியை தொடங்கிவிட்ட நிலையில், இன்று இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஆடிய கருண் நாயர், ஷர்துல் தாகூர், அபிமன்யூ ஈஸ்வரன், அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப், ரிஷப் பண்ட் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை.
கருண் நாயர் நீக்கம்
குறிப்பாக 3 ஆயிரம் நாட்களுக்கு பின் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்த கருண் நாயர் தேர்வு செய்யப்படாதது ஆச்சரியத்தை கொடுத்தது. ஏனென்றால் ஓவல் டெஸ்ட் போட்டியில் அவர் முதல் இன்னிங்ஸில் தனியாளாக நின்று அரைசதம் அடித்திருந்தார். கருண் நாயரிடம் இருந்து அதிகமாக எதிர்பார்த்ததாகவும், அவர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் தேவ்தத் படிக்கலை தேர்வு செய்துள்ளதாகவும் அஜித் அகர்கர் தெரிவித்தார்.
இந்த சூழலில் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட கருண் நாயர் பேசும் போது, இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் என்ன சொல்வதென்று தெரியவில்லை. பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை.. இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு என்ன கருத்து சொல்ல முடியும்.. இதற்கு பதில் சொல்வது மிகவும் கடினம்.
புலம்பிய கருண் நாயர்
தேர்வுக் குழுவினர் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டு சொல்லுங்கள்.. கடைசி டெஸ்ட் போட்டியில் நான் அரைசதம் அடித்தேன். அப்போது வேறு எந்த வீரரும் முதல் இன்னிங்ஸில் ரன்களே சேர்க்கவில்லை. நான் இந்திய அணிக்காக பங்களிப்பு செய்தேன். அந்தப் போட்டியில் வென்றதற்கு எனது பங்களிப்பும் இருந்தது. அப்படிதான் நம்புகிறேன். ஆனால் என்ன நடந்ததோ, அது நடந்துவிட்டது.
அப்படியான விஷயங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று தெரிவித்துள்ளார். விஜய் ஹசாரே தொடரில் 8 இன்னிங்ஸில் 5 சதங்கள் உட்பட 779 ரன்களை விளாசி இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்தார். ஆனால் ஒரேயொரு டெஸ்ட் தொடரில் மட்டும் கருண் நாயருக்கு வாய்ப்பு கொடுத்து இந்திய அணி கழற்றிவிட்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

