இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதன்பின் இந்திய அணியின் கேஎல் ராகுல் – ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், கேஎல் ராகுல் 46 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஜெய்ஸ்வால் கம்பேக்
இதன்பின் சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் தனது 12வது அரைசதத்தை நிறைவு செய்தார். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் பவுலிங்கில் தடுமாறிய ஜெய்ஸ்வால், இந்த போட்டியில் ஆர்ச்சரை எளிதாக சமாளித்து விளையாடினார். தேவைக்கேற்ப பவுண்டரியை விளாசிய அவர், இங்கிலாந்து அணி மீது அழுத்தத்தை கொடுத்தார். சிறப்பாக ஆடிய அவர், 107 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இந்த இன்னிங்சில் மூலமாக ஜெய்ஸ்வால் 2 சாதனைகளை படைத்திருக்கிறார். ஓல்டு டிரஃபோர்டு மைதானத்தில் இந்திய அணி இதுவரை ஒரு வெற்றியை கூட பெற்றது கிடையாது. அதேபோல் ஸ்விங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் தொடக்க வீரர்கள் பேட்டிங் செய்வது எளிதான விஷயமல்ல. கடைசியாக இந்திய அணிக்காக ஆடிய தொடக்க வீரர்கள் சுனில் கவாஸ்கர் மட்டுமே 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.
சாதனைகள் விவரம்
1974ல் நடந்த டெஸ்ட் போட்டியில் சுனில் கவாஸ்கர் 251 பந்துகளில் 101 ரன்களை எடுத்திருந்தார். அதன்பின் கடந்த 51 ஆண்டுகளில் எந்தவொரு இந்திய தொடக்க வீரரும் ஒருமுறை கூட அரைசதம் விளாசியது இல்லை. இன்றைய ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் அரைசதம் விளாசியதன் மூலமாக புதிய சாதனையை படைத்துள்ளார். அதேபோல் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆயிரம் ரன்களையும் ஜெய்ஸ்வால் எட்டியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆயிரம் ரன்களை விளாசிய 20வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். அதேபோல் அதிவேகமாக ஆயிரம் ரன்களை விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை ஜெய்ஸ்வால் பிடித்துள்ளார். 16 இன்னிங்சில் ஜெய்ஸ்வால் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். சச்சின் மற்றும் டிராவிட் ஆகிய இருவரும் 15 இன்னிங்சில் ஆயிரம் ரன்களை கடந்து முதலிடத்தில் உள்ளனர்.

