இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ஜடேஜா, முகமது சிராஜ், கேஎல் ராகுல் உள்ளிட்ட அத்தனை வீரர்களும் மிகச்சிறந்த பங்களிப்பை செய்தனர்.
3 இந்திய பேட்ஸ்மேன்கள்
அதேபோல் இங்கிலாந்து அணி தரப்பில் ஹாரி ப்ரூக், ஜேமி ஸ்மித் உள்ளிட்டோர் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இந்த சூழலில் ஐசிசி பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நம்பர் 1 இடத்தில் இருந்த இங்கிலாந்து ஜாம்பவான் ஜோ ரூட் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதன் மூலமாக ஜோ ரூட் இடத்தை ஹாரி ப்ரூக் பிடித்து அசத்தி இருக்கிறார்.
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஹாரி ப்ரூக் முதலிடத்தை பிடித்து புதிய சாதனை படைத்திருக்கிறார். அதேபோல் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நம்பர் 4 இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார். இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 15 இடங்கள் முன்னேறி 6வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் டாப் 10 இடங்களுக்குள் வருவது இதுவே முதல்முறையாகும்.
ஆகாஷ் தீப், சிராஜ் அசத்தல்
அதேபோல் 2வது டெஸ்டில் அரைசதம் அடித்த ரிஷப் பண்ட் ஒரு இடம் பின் தங்கி 7வது இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலமாக டாப் 10 இடங்களில் இந்திய அணியின் 3 முக்கிய பேட்ஸ்மேன்கள் பிடித்து அசத்தியுள்ளனர். அதேபோல் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் வியான் முல்டர் 34 இடங்கள் முன்னேறி 22வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
பவுலிங்கை பொறுத்தவரை பும்ரா வழக்கம் போல் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜ் 6 இடங்கள் முன்னேறி 22வது இடத்தை எட்டியுள்ளார். ஜடேஜா 14வது இடத்தையும், 10 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய ஆகாஷ் தீப் 39 இடங்கள் முன்னேறி 45வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

