இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. சீனியர் வீரர்கள் பலரும் ஓய்வு பெற்றுள்ள நிலையில், இந்திய அணி இளம் வீரர் சுப்மன் கில் தலைமையில் களமிறங்க உள்ளது. இதற்காக ஜூன் முதல் வாரத்திலேயே லண்டன் சென்றுள்ள இந்திய அணி, பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது.
நம்பர் 4 வரிசை யாருக்கு?
இந்த நிலையில் விராட் கோலியின் நம்பர் 4 பேட்டிங் வரிசையில் எந்த வீரர் களமிறங்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் 2013 வரை சச்சின் டெண்டுல்கர் ஆடி வந்த நிலையில், அதன்பின் நிரந்தரமாக விராட் கோலி விளையாடி வந்தார். விராட் கோலி காயம் அல்லது ஓய்வில் இருந்த போது, ரஹானே அந்த இடத்தில் ஆடினார்.
இதனால் விராட் கோலி இடத்தில் விளையாட எந்த வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதில் கேஎல் ராகுல், கருண் நாயர், சாய் சுதர்சன், துருவ் ஜுரெல் உள்ளிட்ட வீரர்களில் யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கேள்வி எழுந்தது. இதுகுறித்து சுப்மன் கில் அளித்துள்ள பேட்டியில், இதுவரை அந்த முடிவை எடுக்கவில்லை. இப்போது நாங்கள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறோம்.
சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு
அந்த பயிற்சி ஆட்டங்களின் முடிவில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் எந்த வீரருக்கு எந்த பேட்டிங் வரிசை சரியாக இருக்கும் என்பதையும் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் நம்பர் 4 வரிசையில் பேட்டிங் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சுப்மன் கில் கிரிக்கெட் வாழ்க்கையில் நம்பர் 4 பேட்டிங் வரிசையில் விளையாடியதே கிடையாது. ஜூனியர் லெவல் முதல் தற்போது வரை தொடக்க வீரர் அல்லது நம்பர் 3 பேட்டிங் வரிசையில் தான் விளையாடி இருக்கிறார். ஆனால் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் சுப்மன் கில்லால் சிறப்பாக விளையாட முடியாத சூழலில், அவர் நம்பர் 4க்கு களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.

