இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த ஆட்டத்தில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
ருதுராஜ் பேட்டி
இதுவரை சிஎஸ்கே அணி ஆடியுள்ள 4 போட்டிகளில் ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் மோசமான நிலையில் உள்ளது. இதனால் மீண்டும் 2020 சீசனை போல் சிஎஸ்கே அணிக்கு மோசமான ஒன்றாக அமையும் என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். ஏனென்றால் வெற்றி பெறுவதற்கான எந்த அறிகுறியையும் சிஎஸ்கே அணியின் வீரர்கள் வெளிக் காட்டவில்லை என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த தோல்வி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் பேசும் போது, கடந்த சில போட்டிகளாகவே ஆட்டம் எங்கள் பக்கம் செல்லவில்லை. நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் மீண்டும் அதே முடிவுதான் எங்களுக்கு கிடைக்கிறது. பவர் பிளேவில் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம்.
பவர்பிளே ஓவர்களில் சொதப்பல்
பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டு பவர் பிளேவிலும் ஆட்டம் எங்களின் கைகளில் இல்லை. 15 முதல் 20 ரன்களை எளிதாக விட்டுக் கொடுக்கிறோம். இல்லையென்றால் அதிக விக்கெட்டுகளை இழந்துவிடுகிறோம். நாங்கள் ஒரு குழுவாக முயற்சிக்கிறோம். ஆனால் திட்டம் சரியாக நடப்பதில்லை. பவர் பிளேவை பற்றி அதிகமாக கவலைப்படுவதாக நினைக்கிறேன்.
பேட்டிங்கில் பவர் பிளேவில் ஒரு விக்கெட்டுக்கு மேல் இழக்க கூடாது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே நாங்கள் ஒரு அடி பின்னாடியே இருந்தோம். வெற்றிபெற வேண்டுமென்றால் 11 பேரும் இணைந்து செயல்பட வேண்டும். பவர் பிளேவுக்கு பின் ஆட்டத்தில் எங்களின் கைகள் உயரவே இல்லை. டெல்லி அணியின் பவுலிங் சிறப்பாக இருந்தது. சிவம் துபே பேட்டிங் செய்த போது, நாங்கள் பாசிட்டிவாக இல்லை என்று தெரிவித்தார்.

