29 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் மண்ணில் ஐசிசி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி, வெறும் 6 நாட்களில் தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் அணி ரசிகர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நியூசிலாந்து அணி மற்றும் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.
இதனால் பாகிஸ்தான் அணி மொத்தமாக வெளியேறி இருக்கிறது. இதனிடையே பாகிஸ்தான் அணி வீரர்கள் வாழை பழங்களை சாப்பிட்டதை வாசிம் அக்ரம் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையான சூழலில், பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் பேசி இருக்கிறார்.
ஷாகின் அப்ரிடி இப்படி செய்யலாமா?
யோக்ராஜ் சிங் பேசும் போது, சுப்மன் கில்லை வீழ்த்திய போது அப்ரார் அஹ்மத் கொண்டாடிய விதம் கொஞ்சம் கூட ஏற்க முடியாது. அதேபோல் விராட் கோலி சதத்தை நெருங்கிய போது, ஷாகின் அப்ரிடி ஒய்டுகளை வீசுகிறார். உங்களுக்கு திறமை இருந்தால், விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தி நிரூபிக்க வேண்டும். அதற்கு பதிலாக ஒய்டு வீசி என்ன செய்ய போகிறீர்கள். அது உங்களின் மோசமான மனநிலையை காட்டுகிறது.
இப்படியான செயல்களை செய்யவே கூடாது. வெற்றியோ, தோல்வியோ களத்தில் சாம்பியனை போல், ஒரு சிங்கத்தை போல் விளையாட வேண்டும். பாகிஸ்தான் அணியில் ஒரு நல்ல தலைவன் இல்லை. அந்த நாட்டிலும் சிறந்த தலைவர்கள் இல்லை. அதனால் பாகிஸ்தானை நினைத்தால் பரிதாபமாகவே இருக்கிறது. அதேபோல் வாசிம் அக்ரமை போன்ற ஜாம்பவான் கேவலமான விஷயங்களை பேசலாமா?
அசிங்கமா இல்லையா?
அதனை கூறிய பின் சுற்றி இருப்பவர்கள் சிரிக்கிறார்கள். இதனை நினைத்து நீங்கள் அசிங்கப்பட வேண்டும். சோயப் அக்தர் போஒன்ற ஒரு வீரர் பாகிஸ்தான் வீரர்களை ரோஹித் சர்மா, விராட் கோலியுடன் ஒப்பிடுகிறார். வாசிம் அக்ரம் உள்ளிட்ட யாராக இருந்தாலும் வர்ணனையில் அமர்ந்து பணம் சம்பாதிக்கிறீர்கள்.
அதற்கு பதிலாக உங்கள் நாட்டிற்கு சென்று ஒரு அகாடமியை தொடங்கி பாகிஸ்தான் உலகக்கோப்பை வெல்ல உதவி செய்யலாமே?ஒருவேளை பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியளிக்க நான் சென்றால், நிச்சயமாக ஓராண்டுக்குள் சிறந்த அணியாக மாற்றி காட்டுவேன். என்னை பொறுத்தவரை கிரிக்கெட் மீதான ஆர்வம் மிகவும் முக்கியம். 12 மணி நேரம் பயிற்சி அளிப்பேன். உங்களின் வியர்வையும், ரத்தமும் நாட்டுக்காக இருக்க வேண்டும். வெறுமனே வர்ணனையில் அமர்ந்து கிண்டல் செய்வதால் எந்த மாற்றமும் வந்துவிடாது என்று கூறியுள்ளார்.

