ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்னும் 3 நாட்களில் பிரம்மாண்டமாக தொடங்கவுள்ளது. ஹைபிரிட் மாடலில் நடக்கும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர், மொத்தமாக 19 நாட்கள் நடக்கவுள்ளது. இதற்காக 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஏற்கனவே அனைத்து அணிகளும் பாகிஸ்தான் மற்றும் துபாய்-க்கு சென்று சேர்ந்துள்ளனர்.
துபாய் சென்ற இந்திய அணி
இந்திய அணியை பொறுத்தவரை உலகக்கோப்பை தொடரை போல் அல்லாமல், சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்குடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பதற்காக கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி துபாய்க்கு புறப்பட்டது.
துபாயில் இறங்கிய பின் வழக்கம் போல் ரோஹித் சர்மா பேருந்தின் படிக்கட்டுகளில் நின்று நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தார். இதனால் வழக்கம் போல் கேப்டன் ரோஹித் சர்மா பாஸ்போர்ட், உடைமைகள், செல்ஃபோன் உள்ளிட்டவற்றில் ஏதோ ஒன்றை மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டதாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் இதற்கு முன்பு ரோஹித் சர்மா இதுபோல் எண்ணற்ற விஷயங்களை செய்தவர்.
ரோஹித் சர்மாவால் தாமதமா?
ஏனென்றால் இந்திய அணி வீரர்கள் அமர்ந்திருந்த பேருந்து சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. இதுகுறித்து விசாரித்த போது, ரோஹித் சர்மா மீது எந்த தவறும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. துபாயில் இந்திய அணி வீரர்கள் விமான நிலையத்தில் இருந்து ஒவ்வொரு நபராக வந்த போது, மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் ஒவ்வொரு நபராக விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்து பேருந்தில் ஏறினர். ஆனால் நீண்ட நேரமாக பேருந்து ஹோட்டலுக்கு புறப்படாமலேயே இருந்தது. அதேபோல் இந்திய அணியுடன் வந்த கேஎல் ராகுல் இந்திய அணி வீரர்களுடன் காணப்படவில்லை.
விமான நிலையத்தில் இருந்து வெளியிலும் வரவில்லை. இந்த விவகாரம் குறித்துதான் பாதுகாப்பு அதிகாரிகள் ரோஹித் சர்மாவுக்கு விளக்கம் அளித்து வந்தனர். இதன் காரணமாகவே இந்திய அணி பேருந்து 20 நிமிடங்கள் தாமதமாக ஹோட்டலுக்கு புறப்பட்டது. இதன்பின் கேஎல் ராகுல் மட்டும் தனியாக காரில் ஹோட்டலுக்கு சென்று சேர்ந்துள்ளார்.

