இந்தியா – இங்கிலாந்து இடையேயான டி20 தொடரின் நான்காவது போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் கைப்பற்றியது. தொடரின் போக்கை தீர்மானிக்கும் இந்தப் போட்டியில் இந்தியா அநீதியான முறையில் வென்றதாக அனைத்துப் பக்கத்திலும் இருந்து புகார்கள் குவிகின்றன.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா துவக்கத்தில் மிகப் பெரிய சரிவைச் சதித்தாலும் டூபே, பாண்டியா இருவரின் அதிரடியான அரை சதம் உதவியுடன் 181 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 15 ரன்கள் பின்னிலையில் ஆல் அவுட் ஆகி தொடரை இழந்தது. ஆரம்பத்தில் பென் டக்கெட் 39(19) மற்றும் ஹாரி புரூக் அரை சதத்தை தாண்டிய போது போட்டி இங்கிலாந்து பக்கம் சாய்த்தது.
ஆனால் இடையில் இந்திய ஸ்பின்னர்கள் கம்பேக் கொடுக்க இறுதியில் டெத் ஓவரில் காயமடைந்த டூபேக்கு மாற்றாக வந்த ஹர்ஷித் ராணா இந்திய அணிக்கு சாதகமாக போட்டியை மாற்றினார். இது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இங்கிலாந்து கேப்டன் பட்லர் போட்டி முடிந்த பின்பு ” சரியான மாற்று வீரர் இல்லை ” எனக் குறிப்பிட்டார்.
இது பற்றி இந்திய கிரிக்கெட் வல்லுனர்கள் அஷ்வின், அனிருத் ஶ்ரீகாந்த் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பியுள்ளனர். அஷ்வின் பேசியதாவது, ” இது சர்வதேசப் போட்டியா ? ஐ.பி.எல் போல விளையாடுகிறார்கள். டூபேவுக்கு மாற்றாக ராணா வந்தது என வகையில் நியாயம் ? ஐ.பி.எலில் இம்பேக்ட் வீரரைப் பயன்படுத்துவது போல ஒரு வீரரின் பேட்டிங்க்கு பயன்படுத்திவிட்டு அவருக்கு பதிலாக ஒரு பந்து வீச்சாளரை உள்ளேக் கொண்டு வந்து போட்டியை வென்றுள்ளனர். “
” இந்திய அணி ராணாவை மாற்று வீரராக தேர்வு செய்தாலும் போட்டி நடுவர்கள் ஏன் அதை அனுமதித்தார்கள் ? அணியில் டூபேவுக்கு சரியான மாற்றி வீரராக ஆல்ரவுண்டர் ரமந்தீப் சிங் இருந்த போதிலும் இந்தியா ராணாவுடன் போனது கூடுதல் பலத்தைக் கொடுத்தது. 2020இல் இதே போல ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜடேஜாவுக்கு பதிலாக சஹல் வந்து போட்டியை வென்றுக் கொடுத்தார். அப்போதாவது ஸ்பின்னருக்கு ஸ்பின்னர் என ஓரளவு நியாயமாக இருந்தது. ஆனால் நேற்று நடந்தது மிகவும் மோசம். ” எனப் பேசினார் ரவிச்சந்திரன் அஷ்வின்.

