இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்காக டி20ஐ தொடரின் முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றிப் பெற்றது. நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பரபரப்பான 2வது ஆட்டத்தில் இந்திய வீரர் திலக் வர்மா அதிரடியான ஆடி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் இங்கிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்து. விக்கெட்டுகள் ஒருபக்கம் மல மலவென விழுந்தாலும் பட்லரின் 45, கார்சின் அதிரடி 17 பந்து 31 மூலம் ஓரளவு சுமாரான ஸ்கோரை இங்கிலாந்து எட்டியது. 166 ரன்கள் இலக்கை துரத்த இந்திய வீரர்கள் களமிறங்கினர்.
இந்திய அணியின் டாப் ஆர்டர் இம்முறை சுதப்ப 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. விக்கெட்டுகளுடன் ரன் ரேட்டும் ஏறியது. கடைசி 8 ஓவரில் 71 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வாஷிங்டன் சுந்தர் சிக்சர், பவுண்டரி என அடிக்கத் துவங்கினார். இருப்பினும் 2 ஓவரில் இங்கிலாந்து இழுத்துப் பிடிக்க இந்திய அணிக்கு மீண்டும் நெருக்கடி.
நிலைத்து ஆடிய திலக் வர்மா கடுமையான அழுத்தத்தைச் சமாளித்து 3 பவுண்டரி, 5 சிக்சர் என 55 பந்தில் 72* விளாசி இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். 16வது ஓவரை வீச வந்த ஆர்சரை 6,4,4 என நொறுக்கி அந்த ஓவரில் 19 ரன்கள் சேர்த்தார். அந்தக் கனமே இந்திய அணியின் வெற்றி உறுதியானது.
4 ஓவரில் ஆர்ச்சர் 60 ரன்களுக்குச் சென்றார். அவரது கேரியரில் இதுவே மிகவும் மோசமான பந்துவீச்சு. டெத் ஓவரில் ஆர்ச்சரை வைத்து வெற்றியைத் தங்கள் பக்கம் இழுக்க நினைத்த இங்கிலாந்து அணியின் எண்ணம் மண்ணானது. போட்டி முடிந்த பிறகு இது பற்றி திலக் வர்மா பேசினார்.
அவர் கூறியதாவது, ” அவர்களது சிறந்த பந்துவீச்சாளரைத் தாக்கினால் மீதம் இருக்கும் பவுலர்களின் மேல் கூட அழுத்தம் பரவும். மேலும் நான் ஆர்ச்சர் விளாசினால் என்னுடன் இருக்கும் பேட்ஸ்மேனுக்கும் போட்டி எளிதாக மாறும். விக்கெட் விழுந்தாலும் நான் இதைச் செய்வதில் உறுதியாக இருந்தேன். ஆர்சருக்கு எதிராக நான் அடித்த அனைத்து ஷாட்களையும் வலையில் பயிற்சி செய்தேன் என்பதால் எனக்கு மிகவும் சுலபமாக இருந்தது. ” என்றார் திலக் வர்மா.
ஏற்கனவே திலக் வர்மா முன்னாள் இடதுகை இந்தியா வீரர் சுரேஷ் ரெய்னா போல ஆடுவதாக ரசிகர்கள் போற்றினர். நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணிக்காக சுரேஷ் ரெய்னா ஆடும் ஆட்டக்தைப் போன்ற இன்னிங்ஸை வெளிக்காட்டி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளார்.

