உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி 2025 ஆம் வருடம் ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் அரங்கில் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்கள் சுவாரசியமாக நடைபெற்று வருகின்றன. இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய பரபரப்பான டெஸ்ட் போட்டி இன்று காலை முடிவடைந்து இருக்கிறது. இந்தப் போட்டியில் இலங்கை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணி ஆசிய கண்டங்களில் சுற்று பயணங்களை மேற்கொண்டு தொடர்களில் விளையாடி வருகிறது. தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இலங்கையின் காலே நகரில் நடைபெற்றது. புதன்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணியின் அபாரமான பந்துவீச்சால் இலங்கை அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது.
எனினும் அந்த அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரம் கமிந்து மெண்டிஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்து இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்டார். மேலும் அவருக்கு பக்க பலமாக விளையாடிய குசால் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 50 ரன்கள் சேர்த்தார். இவர்களது சிறப்பான ஆட்டத்தால் இலங்கை முதல் இன்னிங்சில் 305 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்ஸ் விளையாடிய நியூசிலாந்து அணி 340 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் துவக்க வீரர் டாம் லேத்தம் சிறப்பாக விளையாடி 70 ரன்கள் சேர்த்தார். மேலும் முன்னால் கேப்டன் கேன் வில்லியம்சன் 55 ரன்கள் மற்றும் டேரில் மிட்சல் 57 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர்.
அந்த அணியின் அதிரடி வீரர் கிலன் பிலிப்ஸ் இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடி 49 ரன்கள் சேர்த்தார். இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 35 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனைத் தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. அந்த அணியின் முன்னாள் கேப்டன் கருணரத்னே 83 ரன்கள் எடுத்து அவுட்டானார். மேலும் அந்த அணியின் அனுபவ வீரர்களான தினேஷ் சந்திமால் 61 ரன்களும் ஏஞ்சலோ மேத்யூஸ் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். கேப்டன் தனஞ்சய டிசில்வா 40 ரன்கள் குவித்தார். இதனால் இலங்கை அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 309 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதனைத் தொடர்ந்து 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளர்களிடம் தடுமாறியது. ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியாமல் தடுமாறினர். ஆடுகளம் சுழற் பந்து வீச்சிக்கு சாதகமாக இருந்ததை பயன்படுத்திய இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து அணியை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கினார்.
அந்த அணியின் முன்னாள் கேப்டன் வில்லியம்சன் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டாம் ப்ளண்டெல் ஆகியோர் தலா 30 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தாலும் நியூசிலாந்து அணியின் இளம் ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்தரா தனி ஆளாக நியூசிலாந்து அணியின் வெற்றிக்காக போராடினார். ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் அதிரடி மற்றும் நிதானத்தை கடைப்பிடித்து விளையாடிய அவர் அரை சதம் எடுத்தார். அவரது சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி வெற்றிக்கான சிறிய நம்பிக்கையை பெற்றது.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவின்போது நியூசிலாந்து அணி 206 ரன்கள் எடுத்து 8 விக்கெட் இழந்திருந்தது. அந்த அணியின் வெற்றிக்கு 68 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2 விக்கெட் மட்டுமே கைவசம் இருந்தது. எனினும் ரச்சின் ரவீந்தரா 92 ரன்கள் உடன் களத்தில் இருந்ததால் நியூசிலாந்து அணி வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. எனினும் இன்று தொடங்கிய ஐந்தாம் நாள் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே ரவீந்தரா ஆட்டம் இழந்தார். சிறப்பாக விளையாடிய அவர் 168 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 92 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து ஆட வந்த வில்லியம் ரூர்கே ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்ததால் நியூசிலாந்து அணி 211 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இலங்கை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளும் ரமேஷ் மென்டிஸ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அசித்தா பெர்னான்டோ மற்றும் தனஞ்செயா டிசில்வா ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இலங்கை அணியின் வெற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. நியூசிலாந்து அணி இலங்கை அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும். மேலும் இலங்கையை தொடர்ந்து நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறது. இதனால் தற்போது இலங்கை அணி பெற்றிருக்கும் வெற்றி இந்திய அணிக்கு சாதகமாக அமைந்திருக்கிறது.

