இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்று இருக்கிறது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிகள் பட்டியலிலும் முதலிடத்தை தக்க வைத்திருக்கிறது. இந்தப் போட்டி தொடரின் மூன்றாவது நாள் நடைபெற்ற நகைச்சுவையான சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்தபோது பங்களாதேஷ் அணிக்காக களத்தில் ஃபீல்டர்களை சரி செய்த வீடியோ வைரலானது. இந்த சம்பவம் குறித்து ரிஷப் பண்ட் சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 6 விக்கெட் இழந்து தடுமாறிய போது ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக சதம் அடித்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டார். இதனைத் தொடர்ந்து பும்ராவின் அபாரமான பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடிய இந்தியா 67 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாறிய போது ரிஷப் பண்ட் மற்றும் கில் இருவரும் சிறப்பாக சதம் அடித்து இந்திய அணி 515 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்க உதவினர்.
குறிப்பாக இவர்கள் இருவரில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடினார். 2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பெற்ற அவர் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து தனது இருப்பை உறுதி செய்தார். அதிரடி மற்றும் நிதானம் இரண்டையும் கடைப்பிடித்து விளையாடிய ரிஷப் பண்ட் 128 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவரது சிறப்பான ஆட்டம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. மேலும் டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட் களத்தில் இருந்தால் நகைச்சுவைக்கும் பஞ்சம் இருக்காது என்பது இந்தப் போட்டியிலும் நிரூபணம் ஆனது.
மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது பேட்டிங் செய்து கொண்டிருந்த ரிஷப் பண்ட் பங்களாதேஷ் அணிக்காக ஃபீல்டர்களை சரி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தான் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பங்களாதேஷ் அணியினரிடம் மிட் விக்கெட் திசையில் ஒரு ஃபீல்டரை நிறுத்துமாறு ரிஷப் பண்ட் கேட்டுக் கொண்டார். அதைப்போலவே பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சாளரும் மிட் விக்கெட் திசையில் ஒரு ஃபீல்டரை நிறுத்துமாறு கேப்டனிடம் கூறினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த சம்பவம் வைரலானது. தற்போது இந்த சம்பவம் குறித்து ரிஷப் பண்ட் தனது பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தும் நோக்கில் அவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜாவின் ஆலோசனையின் பேரில் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக விரிவாக பேசிய ரிஷப் பண்ட், இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா உடன் ஆடுகளத்திற்கு வெளியே அடிக்கடி உரையாடல்களில் ஈடுபடுவதாக தெரிவித்தார். அப்போது அஜய் ஜடேஜா போட்டியின் தரத்தை எப்போதும் நாம் உயர்த்த வேண்டும் என அறிவுரை வழங்கியதாக தெரிவித்தார். மேலும் நாம் யாருடன் விளையாடினாலும், எந்த அணிக்கு எதிராக விளையாடினாலும் கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என கூறியதாக பண்ட் தெரிவித்திருக்கிறார்.
இந்த அறிவுரையின் அடிப்படையில் பங்களாதேஷ் அணியின் ஃபீல்டிங் சரி செய்வதில் உதவியதாக தெரிவித்துள்ளார். போட்டியின் போது பங்களாதேஷ் அணி இரண்டு வீரர்களை ஒரே இடத்தில் களத்தடுப்பிற்கு நிறுத்தி இருந்தது. ஆனால் மிட் விக்கெட் திசையில் எந்த வீரர்களும் இல்லாமல் காலியாக இருந்தது. இதன் காரணமாக மிட் விக்கெட் திசையில் ஒரு வீரரை நிறுத்துமாறு அறிவுரை வழங்கியதாக ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

