இந்திய கிரிக்கெட்டின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் இரு மாதங்களுக்கு முன்பு பதவியேற்றார். ராகுல் டிராவிட்டின் இரண்டு வருட ஒப்பந்தம் 2024 டி20ஐ உலகக் கோப்பையுடன் நிறைவடைந்த நிலையில் புதிய பயிற்சியாளராக கம்பீர் வந்துள்ளார்.
அவரின் தலைமையில் இலங்கையில் ஒரு சுற்றுப் பயணத்தை இந்திய அணி முடித்துள்ளது. அதன் பின்னர் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இளம் வீரர்கள் துலிப் டிராபி தொடரில் பங்கேற்று வருகிறார்கள். இந்த தொடரை வைத்துத் தான் வங்கதேச டெஸ்ட் தொடருக்கு வீரர்கள் தேர்வு இருக்குமென பிசிசிஐ அறிவித்தது.
வங்கதேச அணிக்கு எதிராக சென்னையில் நாளை துவங்கவுள்ள முதல் டெஸ்ட் பொட்டியையொட்டி பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் பயிற்சியாளர் கம்பீர் இந்திய ஆடுகளம் பற்றியும், அணியின் நிலவரம் பற்றியும் ஓப்பனாக பேசியுள்ளார்.
முதலில் இந்திய மைதானங்கள் குறித்து பலர் குறை கூறுவதை கம்பீர் மறுத்துப் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ” இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளை இரண்டு நாட்களில் முடிக்கும் அளவுக்கு ஆடுகளங்கள் இருக்கிறது என சொல்லும் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. தென்னாபிரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி இரண்டே தினங்களில் முடிந்தது. அதைப் பற்றி யாரும் பேசாமல் இந்தியாவை மற்றும் குறிப்பிட்டு சொல்வது தவறு. “
மேலும் இந்திய டெஸ்ட் அணியின் பிளேயிங் லெவன் குறித்துப் பேசினார். ” நாங்கள் எந்த ஒரு வீரரையும் ஒதுக்குவது இல்லை. தேவையான வீரகளைத் தான் பிளேயிங் லெவனில் சேர்க்க முடியும். ரிஷப் பண்ட் மிகச் சிறப்பான வீரர். அதைத் தாண்டி அவர் விக்கெட் கீப்பிங்கிலும் நன்றாக செய்கிறார். “
” துருவ் ஜூரல் நல்ல வீரர் தான், ஆனால் பண்ட் அணிக்குத் திரும்பிய நிலையில் அவர் காத்திருக்கத் தான் வேண்டும். அதே போலத் தான் சர்பராஸ் கானும். அவரும் வாய்ப்புக்காக இப்போதைக்கு காத்திருக்க வேண்டும். ” என கம்பீர் பேசினார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நாளை துவங்குகிறது. பிப்ரவரி மாதம் இங்கிலாந்து தொடரில் வாய்ப்புக் கொடுக்கப்பட்ட சர்பராஸ் கான், துருவ் ஜூரல், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் தொடர்கிறார்கள். காயதில் இருந்து மீண்டு வந்துள்ள ரிஷப் பண்ட் அணிக்குத் திரும்பியுள்ளது பெரிய எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது. இவர்களுடன் புதிதாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

