இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் தன் கிரிக்கெட் வாழ்கையின் சிறப்பான ஃபார்மில் விளையாடி சாதனைகள் படைத்து வருகிறார். அண்மையில் லார்ட்ஸ் மைதானத்தில் இரு இன்னிங்சிலும் சதம் விளாசியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக சதங்கள் அடித்த லெஜன்ட் டெஸ்ட் வீரர் அலஸ்ட்டர் குக்கைத் தாண்டியுள்ளார். இதுவரை 34 சதம் உட்பட மொத்தம் 12 ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார்.
சில வருடங்கள் முன்னர் அரை சதம் அடித்துவிட்டு அதனை சதமாக மாற்ற முடியாமல் தவித்தார். மேலும் ரூட்டின் போட்டியாளர்கள் அந்த சமயத்தில் நன்றாக ரன்கள் குவித்துக் கொண்டிருந்தனர். இதனால் ஜோ ரூட் பெரும் விமர்சனத்துக்குள்ளானார். அதற்கெல்லாம் சேர்த்து வைத்து தான் இப்போது அமர்களப்படுத்தி வருகிறார்.
லாக்டவுன் பின்னர் ஜோ ரூட் புதிய அவதாரத்தில் வந்து சிறப்பாக ஆடி ரன்களை குவித்துக் கொண்டுள்ளார். விரைவில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரரான சச்சின் டெண்டுல்கரை தாண்டிவிடுவார். இதனைப் பற்றி முன்னாள் இங்கிலாந்து வீரர் & கேப்டன் கைக்கல் வாகன் பேசி ஓப்பனாக பிசிசிஐயை கேலி செய்துள்ளார்.
“ டெஸ்ட்டில் சச்சின் 15,921 ரன்கள் அடித்துள்ளார். ஜோ ரூட் 3,500 ரன்கள் பக்கம் பின்னால் இருக்கிறார். அவருக்கு இன்னும் 3 ஆண்டுகள் இருக்கிறது. மேலும் அவர் இப்போது கேப்டனும் இல்லை மற்றும் ஆட்டத்தை நன்கு அறிந்துக் கொண்டுள்ளார். அவர் சச்சினைத் தாண்டவில்லை என்றால் தான் ஆச்சர்யம். ” என்றார் வாகன்.
மேலும் பிசிசிஐ பற்றி, “ சச்சினின் சாதனையை ரூட் முறியடித்து அது கிரிக்கெட்டுக்கு நடக்கும் பெரிய விஷயம். ஆனால் பிசிசிஐ அதனை விரும்பமாட்டார்கள். ஒரு இந்திய வீரர் தான் எப்போதும் டாப்பில் இருக்க வேண்டுமென எண்ணுபவர்கள். ” என வெளிப்படையாக இந்திய கிரிக்கெட் போர்ட் குறித்து பேசினார்.
இன்னும் 2 ஆண்டுகளில் நிச்சயம் ஜோ ரூட் சச்சின் டெண்டுல்கர் அவர்களைத் தண்டிவிடுவார். வெறும் 33 வயதாகும் ரூட் கேரியர் முடிவில் 17 ஆயிரம் ரன்கள் பக்கம் இருப்பார்.

