இந்திய அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் மோர்ன் மோர்கல் நியமிக்கப்பட்டிருக்கிறார். அடுத்த மாதம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்துவீச்சு பயிற்சியாளராக இவர் கலந்து கொள்வார் என பிசிசிஐ அறிவித்திருக்கிறது. மேலும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருக்கும் துலீப் ட்ராபி கிரிக்கெட் போட்டிகளை பார்வையிடும் மோர்கல் இந்திய பந்துவீச்சாளர்களுடன் கலந்துரையாடுவார் எனவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
முன்னதாக 2024 ஆம் வருட டி20 உலக கோப்பை போட்டிகளுடன் ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சியாளர்களின் பணிக்காலம் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து கௌதம் கம்பீர் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவரது பயிற்சியின் கீழ் இந்தியா, இலங்கை சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களில் விளையாடியது. கௌதம் கம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆல் ரவுண்டரான ரியான் டென் டோஸ்கேட் துணைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ராகுல் டிராவிட் பயிற்சி காலத்தில் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இருந்த திலீப் தொடர்ந்து பயிற்சியாளராக நீடிக்கிறார். மேலும் இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கு வினய் குமார் மற்றும் முன்னாள் தமிழக வேகப்பந்துவீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்தியா அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி இந்திய அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகியது. ஆனால் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பந்து வீச்சு பயிற்சியாளராக பணியாற்ற தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான மோர்னி மோர்கல் வேண்டும் என பிசிசிஐ நிர்வாகிகளிடம் உறுதியாக தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து மோர்னி மோர்கல் இந்திய அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இது தொடர்பாக தகவல் தெரிவித்த பிசிசிஐ அதிகாரி ” இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் தான் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிவித்தார். மேலும் அணியின் பேட்டிங், பில்டிங் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர்கள் தலைமை பயிற்சியாளரின் வேண்டுகோளுக்கிணங்க நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கௌதம் கம்பீர் சிபாரிசு செய்ததால் தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வேக பந்துவீச்சாளர் மோர்கல் இந்திய அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
மோர்கல் இதற்கு முன்பு பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2023 ஆம் வருட 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் தோல்வியை தொடர்ந்து தனது ஒப்பந்தம் முடியும் முன்னரே பதவியை ராஜினாமா செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஐபிஎல் தொடரில் இவர் லக்னோ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக கௌதம் கம்பீருடன் இணைந்து பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்கா அணிக்காக 86 டெஸ்ட் போட்டிகள், 117 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 44 டி20 போட்டிகளில் மோர்கள் விளையாடி இருக்கிறார். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் விளையாடிய இவரது அனுபவம் வர இருக்கின்ற டெஸ்ட் தொடர்களில் இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக அமையும் எனவும் பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார். தேசிய கிரிக்கெட் அகாடமி தலைமை பயிற்சியாளர் விவிஎஸ் லட்சுமண் மற்றும் டிராய் கூலி ஆகியோருடனும் மோர்னி மோர்கள் ஆலோசனை நடத்த உள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

