தொடர்ந்து அணியில் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான யுஷ்வேந்திர சஹால் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ராயல் லண்டன் கப் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பிசிசிஐ மற்றும் தேர்வாளர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார்.
இந்திய அணியின் முன்னணி லெக் ஸ்பின்னராக விளங்கியவர் யுஷ்வேந்திர சஹால். 2016 முதல் 2019 வரை இந்திய அணிக்காக தொடர்ச்சியாக ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய இவர் 2019 ஆம் வருட உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். 2022 மற்றும் 2024 ஆம் வருட டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பெற்று இருந்தாலும் ஆடும் லெவனில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை அணியில் இடம் பெற்று இருந்த சஹாலுக்கு அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஜிம்பாப்வே மற்றும் இலங்கை சுற்றுப்பயணங்களுக்கான இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. மேலும் செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கும் துலீப் டிராபி கோப்பை போட்டியில் விளையாடும் 4 அணிகளிலும் சஹால் பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில் தான் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியான ராயல் லண்டன் கப் ஒரு நாள் போட்டி தொடரில் பங்கேற்று விளையாடிய சஹால் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி பிசிசிஐக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.
நேற்று நடைபெற்ற கென்ட் அணிக்கு எதிரான 50 ஓவர் போட்டியில் நார்த்தாம்டன்ஷையர் அணிக்காக விளையாடிய சஹால் 10 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் . இவரது அபாரமான பந்துவீச்சால் கெண்ட் அணி 35 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த நார்த்தாம்டன்ஷையர் அணியினர் 14 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்து 86 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.
நேற்றைய போட்டியில் சஹால் வீசிய 10 ஓவர்களில் 5 மெய்டன் ஓவர்களை வீசி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஜெய்டன் டென்லி மற்றும் பெயர்ஸ் ஸ்வான்போல் ஆகிய வீரர்களின் விக்கெட்டை எல்பிடபிள்யு முறையில் வீழ்த்திய சஹால் ஏகான்ஷ் சிங் என்பவரது விக்கெட்டை ஸ்டம்பிங் முறையில் வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து நேதன் கில்கிரிஸ்ட் மற்றும் கிராண்ட் ஸ்டீவர்ட் ஆகியோரும் சஹாலின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து தங்களது விக்கெட்டை இழந்தனர். இந்தப் போட்டியில் 5 விக்கெட் கைப்பற்றியதன் மூலம் லிஸ்ட்டி ஏ கிரிக்கெட் போட்டிகளில் ஆறாவது முறையாக 5 விக்கெட்களை கைப்பற்றி இருக்கிறார் சஹால்.
மேலும் கடந்த வருடம் நடைபெற்ற லண்டன் ராயல் கப் போட்டிகளில் கெண்ட் அணிக்காக விளையாடிய சஹால் 2 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் தொடர்ந்து இடம் கிடைக்காமல் போராடுவதால் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி மீண்டும் தன்னுடைய திறமையை நிரூபிக்க போராடி வருகிறார் சஹால். ஒரு நாள் போட்டிகளை தொடர்ந்து கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரின் 5 போட்டிகளிலும் நார்த்தாம்டன்ஷையர் அணிக்காக சஹால் விளையாட இருக்கிறார்.
இந்திய அணியின் முன்னணி வீரர்களான பிரித்வி ஷா மற்றும் அஜிங்கியா ரகானே ஆகியோரும் இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றனர். பிரித்வி ஷா நார்த்தாம்டன்ஷையர் அணிக்காக விளையாடி வருகிறார். ரகானே லீசெஸ்டர் அணியில் விளையாடுகிறார். ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் சஹாலுக்கு இந்தியாவின் ஒருநாள் மட்டும் டி20 தொடருக்கான அணியில் வாய்ப்பு மறுக்கப்படுவது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

