2025 ஆம் வருட ஐபிஎல் போட்டிகள் தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டு இருக்கும் புதிய விதிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டி தொடருக்கான வீரர்களின் ஏலம் டிசம்பர் மாதம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் 2025 ஆம் வருட ஐபிஎல் தொடருக்கு முன்பாக மெகா ஏலம் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்திருந்தது.
இது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகிகள் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களை சந்தித்து மெகா ஏலம் மற்றும் வீரர்கள் தக்கவைத்துக் கொள்ளப்படுவது தொடர்பாக விவாதித்தனார். இந்த மீட்டிங்கில் ஒவ்வொரு அணியும் வீரர்கள் தக்க வைத்துக் கொள்வது தொடர்பாக வெவ்வேறான கருத்துக்களை முன் வைத்ததால் குழப்பம் ஏற்பட்டது. எனினும் பெரும்பாலான ஐபிஎல் அணிகள் 5 முதல் 6 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இது தொடர்பாக மீண்டும் ஒருமுறை கூட்டம் நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும் என பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் வீரர்களை தக்க வைப்பது தொடர்பாக பிசிசிஐ புதிய விதிகளை அறிவித்துள்ளது என கிரிக்பஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிகளின்படி ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த செய்தி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்திருக்கிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே ரசிகர்களால் தல என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி 2024 ஆம் வருட ஐபிஎல் போட்டிகளின் துவக்கத்தில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இதனால் 2025 ஆம் வருட ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடுவாரா.? என்ற சந்தேகம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோனி 2025 ஆம் வருட ஐபிஎல் போட்டிகள் குறித்து பேசி இருந்தார்.
ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது குறித்து சிந்திப்பதற்கு இன்னும் காலம் இருக்கிறது. மேலும் ஐபிஎல் போட்டிகளில் ஒரு அணிக்கு 5 அல்லது 6 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி வழங்கினால் வர இருக்கின்ற ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து யோசிப்பேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிசிசிஐ நிர்வாகமும் ஐபிஎல் அணிகள் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதித்திருக்கிறது.
இதன் காரணமாக மகேந்திர சிங் தோனி விளையாடுவதை மீண்டும் ஒருமுறை ஐபிஎல் போட்டிகளில் காணலாம் என சிஎஸ்கே ரசிகர்களும் கிரிக்கெட் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். முன்னதாக பெரும்பாலான ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் 5 முதல் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் பிசிசிஐ 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதி வழங்கி இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் செய்தி தெரிவித்துள்ளது.
மேலும் புதிய விதிகளின்படி ஒரு அணி 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும். இது ஏலத்தின் போது ரைட் டு மேட்ச் கார்டு மூலம் தக்க வைக்கப்படும் வீரர்களையும் உள்ளடக்கியது என க்ரிக்பஸ் வெளியிட்டுள்ள செய்தி தெரிவித்துள்ளது. 2025 ஆம் வருட ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த அறிவிப்புகளை பிசிசிஐ நிர்வாகம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

