இந்திய அணியின் லெஜெண்ட் கிரிக்கெட்டாக அறியப்படும் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் தற்போது மீண்டும் கிரிக்கெட்டில் களமிறங்க உள்ளார்.
சமீபத்தில் வெளிநாடுகளில் நடைபெற்ற டி20 லீக் போட்டிகளில் விளையாடிய யுவராஜ் சிங் அதற்குப் பிறகு ஐபிஎல் அணியின் ஆலோசகராக வரவிருப்பதாக விருப்பம் தெரிவித்திருந்தார். மேலும் வரும் காலங்களில் இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு பயிற்சி வழங்கவும் வரவிருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் தற்போது கிரிக்கெட்டராக அதுவும் ஒரு அணிக்கு கேப்டனாக தலைமை தாங்க உள்ளார். இச்செய்தி ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. எல்சிடி என்று அழைக்கப்படும் லெஜன்ட் கிரிக்கெட் டிராபி தொடரின் இரண்டாவது சீசன் இலங்கையில் நடைபெற உள்ளது.
இதில் இரண்டாவது சீசனில் நியூயார்க் சூப்பர் ஸ்டார் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் கேப்டனாக தற்போது யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களான பாபர் அசாம், மற்றும் இமாம் உல்ஹக் ஆகியோரும், ரஷீத் கான்,பொல்லார்ட், நசீம் ஷா, மதீஷா பத்திரனா, ரஹ்மானுல்லா குர்பாஸ், ஆசிஃப் அலி ஆகிய நட்சத்திர வீரர்களை இந்த அணி உள்ளடக்கியுள்ளது.
இத்தொடரின் முதல் சீசன் இந்தியாவில் நடைபெற்றது. முதல் தொடரின் இறுதிப் போட்டி சில காரணங்களால் நடத்த முடியாமல் போக, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்தூர் நைட்ஸ் மற்றும் கவுகாத்தி அவெஞ்சர்ஸ் ஆகிய இரு அணிகளும் சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டன. முதலில் இத்தொடர் டி20 வடிவத்திலேயே நடத்தப்பட்டது.
பின்னர் ரசிகர்களிடையே சுவாரசியத்தை அதிகரிக்க 90 பந்துகளாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தொடரில் ஒரு அணியின் ஐந்து பந்துவீச்சாளர்கள் தலா மூன்று ஓவர்கள் வீச முடியும். போட்டியின் பத்தாவது ஓவரை அதாவது 60 பந்துகள் வீசி முடிக்கப்பட்ட பிறகு ஒருவருக்கு மட்டுமே கேப்டன் நான்காவது ஓவரை வீச அனுமதி அளிக்க முடியும்.
மேலும் நியூயார்க் சூப்பர் ஸ்டார்ஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள யுவராஜ் சிங்கை அணி நிர்வாக முழுமையாக நம்பியுள்ளது. அவரது தலைமைத்துவமும், அனுபவமும் அணிக்கு நிச்சயம் கை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. 2007 டி20 உலக கோப்பை மற்றும் 2011ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த யுவராஜ் சிங் தற்போது இந்த அணிக்கு கேப்டனாக பதவி வகிப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இத்தொடர் வருகிற மார்ச் மாதம் 7ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நடைபெறுகிறது.
உலகின் மூத்த கிரிக்கெட் வீரர்கள் பங்குபெறும் இத்தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நிச்சயம் சுவாரசியம் அளிக்கக் கூடிய வகையில் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

