இதெல்லாம் ரொம்ப ஓவர்… சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலகியதும் பொல்லார்ட் செய்த செயல்.. கடுப்பில் சிஎஸ்கே ரசிகர்கள்
SA20 தொடரில் ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமான கீரன் பொல்லார்ட், தற்போது அந்த அணியிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில், விலகிய மறுநாளே அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
2027 SA20 ஏலத்தில் பொல்லார்டை ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியிருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் குழுவுக்குச் சொந்தமான இந்த அணிக்காக அவர் விளையாட இருந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து SA20 தொடரிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார்.
பொல்லார்டின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி
பொல்லார்ட் தற்போது ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலகியுள்ள நிலையில், அவர் பழைய வீடியோவை மீண்டும் பகிர்ந்திருப்பது ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், இந்த வீடியோவை அவர் பகிர்ந்ததற்கும் அணியிலிருந்து விலகிய முடிவுக்கும் தொடர்பு இருப்பதாக உறுதிப்படுத்தும் தகவல் இல்லை.
ஆனால், சில சிஎஸ்கே ரசிகர்கள், சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடப் போவதில்லை என்று விலகிய பொல்லார்ட், பிராவோவுடன் இருக்கும் இந்தப் பழைய வீடியோவைப் பகிர்ந்திருப்பது கிண்டல் செய்யும் விதமாக இருப்பதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நீண்ட காலம் விளையாடிய பொல்லார்ட், தற்போது அந்த அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ளார். அவரது புதிய பொறுப்பும், ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலகிய முடிவும் ஒரே நேரத்தில் பேசப்படும் நிலையில், பழைய வீடியோவும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

