இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, தனது 37 வயதில் லிங்க்ட்இன் தளத்தில் புதிதாக இணைந்துள்ளார். கிரிக்கெட் மைதானத்தில் தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் அவர், தற்போது கிரிக்கெட்டைத் தாண்டி தனது தொழில் சார்ந்த பயணத்திலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். அவருடைய இந்தப் புதிய முயற்சி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
கோலி தனது லிங்க்ட்இன் பக்கத்தில், இந்திய விளையாட்டுத் துறையை உலக அளவில் வளர்ப்பதற்கான தனது பார்வையைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, அகிலிடாஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் முதலீட்டாளராகவும், ஒன்8 வேர்ல்டு நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் அவர் செயல்பட்டு வருகிறார். இந்திய விளையாட்டு நிறுவனங்களையும் பிராண்டுகளையும் சர்வதேச அளவில் கொண்டு செல்வதில் அவர் ஆர்வம் காட்டி வருவது இந்தப் பதிவின் மூலம் தெரியவந்துள்ளது.
தனது முதல் பதிவில் இந்தியாவின் விளையாட்டுத் துறை குறித்த தனது தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்துள்ள கோலி, இந்தியாவால் உலக விளையாட்டுத் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்க முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகும் விளையாட்டுத் துறையில் தனது பங்களிப்பைத் தொடரும் நோக்கில் கோலி எடுத்து வரும் இந்த முயற்சி தற்போது பேசுபொருளாகியுள்ளது.

