இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் மீண்டும் தேர்வாளர்களின் முடிவால் ஏமாற்றத்தை சந்தித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அணியில் தனது இடத்தை இழந்த அவர், தற்போது ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக பிரப்சிம்ரன் சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் இந்திய வீரர் டோட்டா கணேஷ் தேர்வாளர்களின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார். தனது ‘X’ பக்கத்தில் பதிவு செய்த அவர், சஞ்சு சாம்சனுக்கு நடந்தது நியாயமற்றது என்று தெரிவித்துள்ளார்.
“இந்தியாவுக்கு மூன்றாவது டி20 உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய சஞ்சு சாம்சன் இப்படிப்பட்ட நடத்தையை பெற எந்த காரணமும் இல்லை. வெறும் மூன்று போட்டிகளுக்குப் பிறகே அவரை அணியில் இருந்து நீக்கியிருப்பது முற்றிலும் அபத்தமான முடிவு. இதைவிட சிறந்த அணுகுமுறைக்கு அவர் தகுதியானவர்,” என்று டோட்டா கணேஷ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
டோட்டா கணேஷின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சஞ்சு சாம்சனின் நீக்கம் குறித்து ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்த விவாதத்திற்கு, அவரது பதிவு மேலும் வலு சேர்த்துள்ளது. இந்திய அணியின் இந்த முடிவு வரும் நாட்களிலும் பேசுபொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

