நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு பும்ரா மிக முக்கிய காரணமாக இருந்தார். இதுகுறித்து பாப் டு பிளேசிஸ் மிகவும் புகழ்ந்து பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் இங்கிலாந்து மிகவும் அதிரடியாக விளையாடி வந்த காரணத்தினால் இந்திய அணிக்கு மிகப்பெரிய நெருக்கடி உருவானது. இந்த நிலையில் கேப்டன் சூரியகுமார் யாதவ் புத்திசாலித்தனமாக பும்ராவை பதினாறு மற்றும் பதினெட்டாவது ஓவர்களுக்கு பந்து வீச கொண்டு வந்தார். இந்த இரண்டு ஓவர்களிலும் பும்ரா வெறும் 14 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதுவே இங்கிலாந்துக்கு கடைசி ஓவரில் நெருக்கடியாக மாறி இந்திய அணி வெற்றி பெற உதவியது.
இதுகுறித்து பாப் டு பிளேசிஸ் கூறும்பொழுது “இந்திய அணியில் பும்ரா போன்ற ஒருவர் இருப்பதற்கு, அவர்கள் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பதை அவர்களே இன்னும் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். நீங்கள் விளையாடுவது எந்த பார்மெட் ஆக இருந்தாலும் அவர் கையில் பந்தை கொடுத்தால் வெல்ல வைத்து விடுவார் என்பது இன்னும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டு விட்டது. எல்லா கேப்டனும் கனவு காணும் அபூர்வமான சக்தி இது. அவர் இருப்பது மாய விளக்கை நாம் வைத்திருப்பது போல. நீங்கள் அதை தேய்த்தவுடன் பும்ரா எனும் ஜீனி வெளிப்பட்டு வேண்டுவதை செய்து கொடுத்து விடும்” என்று கூறியிருக்கிறார்.

