நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது சுற்று தகுதி பெற முடியாமல் முதல் சுற்று உடன் வெளியேறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியா அணி முதல் சுற்று வுடன் வெளியேறும் மோசமான நிகழ்வு தற்போது தான் நடைபெற்று உள்ளது. இதன் காரணமாக இந்திய முன்னாள் வீரர்கள் தன்னை கேலி கிண்டல்கள் செய்வதாக ரிக்கி பாண்டிங் வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார்.
இது குறித்து ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது “கடந்த சில நாட்களாக நான் என்னுடைய இந்திய நண்பர்களின் கேலி கிண்டல்களை தொடர்ந்து சந்தித்து வருகிறேன். ஆனால் இதுவெல்லாம் சகஜம்தான். இதில் நல்லது கெட்டது இரண்டையுமே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் இதற்கு முன்பாக நான் தான் அவர்களுக்கு இந்த மாதிரியான நேரங்களில் அதிகப்படியான கிண்டல் மெசேஜ்களை அனுப்பி வைத்திருக்கிறேன். தற்போது முதல்முறையாக அவர்கள் எனக்கு அனுப்பும்படி நிலைமை மாறிவிட்டது. ஏனென்றால் எங்கள் ஆஸ்திரேலியா அணி இந்த உலகக் கோப்பை தொடரில் மோசமாக விளையாடி உள்ளது”
“சில நாட்களுக்கு முன்பு இந்த ஆஸ்திரேலியா அணியில் ஆரா இல்லை என்றால் ஆதிக்க உணர்வு இல்லை என்று கூறியிருந்தேன். ஒரு போட்டியில் நமக்கு சின்ன சின்ன தருணங்கள் கிடைக்கும். அதை நாம் வென்றால்தான் போட்டியை வெல்ல முடியும். இந்த ஆஸ்திரேலியா அணிக்கு அப்படியான தருணங்களை வெல்லக்கூடிய சக்தி இல்லை. மேலும் உலகக் கோப்பை மாதிரியான பெரிய தொடர்களில் உங்களுடைய அனுபவ வீரர்கள் எழுந்து நிற்க வேண்டும். ஆனால் இது எதுவுமே நடக்கவில்லை. இந்த உலகக் கோப்பை பயணம் ஆஸ்திரேலியாவுக்கு மோசமானதாக அமைந்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

