இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சிறப்பாக தொடரைக் கைப்பற்றி இருக்கிறது. இது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் ராவிட் இத்தொடர் குறித்து சில சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்.
சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டி தோல்விக்கு பிறகு இந்திய அணி மனரீதியாக சற்று பாதிப்படைந்து இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் தோல்வி பெற்று சற்று பின்னடைவை சந்தித்திருந்தது. மேலும் அணியின் முன்னணி வீரர்கள் விலகல் இந்திய அணியை சிக்கலையே உருவாக்கி இருந்தது.
இருப்பினும் அதற்குப் பிறகு மீண்டு வந்து தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் அபாரமாக வெற்றி பெற்று ரோகித் சர்மா தலைமையிலான அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கிறது. எனவே தொடருக்கு பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ராகுல் டிராவிட் இந்திய அணி குறித்து சில சிறப்பான தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது
“இந்த வெற்றி முழுக்க முழுக்க இந்திய அணி வீரர்களை மட்டுமே சாரும். தொடக்கத்தில் சில சறுக்கல்களை நாங்கள் சந்தித்தாலும், அதன் பிறகு மீண்டு வந்து வெற்றி பெற்றது மிகுந்த மன மகிழ்ச்சியை தருகிறது. நாங்கள் எப்போதுமே முன்னேறி செல்வதற்கான வழியை தான் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறோம்.
தொடக்கத்தில் நாங்கள் முன்னணி வீரர்களை இழந்திருந்தோம். அது எங்களுக்கு சற்று வருத்தத்தினை அளித்தாலும், இந்தியாவில் நல்ல திறமைகள் இருக்கிறது. இத்தொடரில் அவர்கள் செயல்படும் விதத்தை பார்க்க மிகவும் அருமையாகவே இருந்தது. ரோகித் சர்மா உண்மையிலேயே ஒரு அற்புதமான தலைவர். அவருடன் இணைந்து பணி புரிவது உண்மையிலேயே சிறப்பானதாக இருக்கிறது.
அவர் பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். அவர் அணியை வழிநடத்திச் செல்லும் விதம் மற்றும் சிக்கலான சூழ்நிலைகளில் வீரர்களை கையாள்வது என்றுஅருமையாக செயல்பட்டு இருக்கிறார். அதேபோல இந்திய தேர்வு குழு தலைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் சிறந்த வீரர்களை கண்டுபிடித்து அணிக்கு அனுப்புகிறார்கள்.
இத்தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினின் செயல்பாடும் மிக அருமையாக இருந்தது. இக்கட்டான சூழ்நிலையில் அவர் அணியை விட்டு சென்றாலும் அதன் பிறகு அவர் மீண்டும் வந்து அணியுடன் இணைந்தது அற்புதமானது. மேலும் இந்திய அணி எந்த சூழ்நிலைகளிலும் வெல்லக்கூடிய அணி என்பது தொடர் மூலம் சிறப்பாக நிரூபணம் ஆகிறது. இத்தொடரின் மூலம் நானும் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

